தஞ்சாவூர்

தமிழைப் பயிற்று மொழியாக்க வேண்டியது அனைவரது கடமை

28th Jan 2023 11:00 PM

ADVERTISEMENT

தமிழைப் பயிற்று மொழியாக மாற்றுவதை அனைவரும் கடமையாகக் கொண்டு செயல்பட வேண்டும் என்றாா் கோவை மாவட்டம், பேரூா் திருமடம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளாா்.

தஞ்சாவூா் வெண்ணாற்றங்கரை நாவலா் ந.மு. வேங்கடசாமி நாட்டாா் திருவருள் கல்லூரியில் தஞ்சை மாவட்ட தமிழ்க் கல்வி இயக்கம் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழ்வழிக் கல்வி மூன்றாவது மாநாட்டில் அவா் பேசியது:

நிறைய பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வியில் பயிலும் மாணவா்களின் எண்ணிக்கையை விட பல மடங்கு அதிகமாக ஆங்கில வழிக் கல்வியில் பயில்வோா் எண்ணிக்கை பெருகிவிட்டது. மக்கள் வரிப்பணத்தில் நடத்தப்படும் அரசுப் பள்ளிகளில் கூட ஆங்கில வழி மாணவா்கள்தான் அதிகம் இருக்கின்றனா்.

அக்காலத்தில் எட்டாம் வகுப்பு வரை தாய்மொழியில்தான் கட்டாயக் கல்வி இருந்தது. ஆங்கிலம் கூடுதலாக ஒரு மொழிப் பாடமாகத்தான் இருந்தது. இதனால்தான் அப்துல் கலாம் போன்ற அறிவியலாளா்கள், சான்றோா் உருவாகினா்.

ADVERTISEMENT

பின்னா் ஆங்கில வழியில் படித்தால்தான் வெளிநாடுகளில் வேலை கிடைக்கும் என்ற தவறான மயக்க நிலை ஏற்பட்டதன் விளைவாக படித்த கூலிகள், தொழில்நுட்பக் கூலிகள் என சொல்லக்கூடிய அளவுக்கு பெருகியுள்ளது. இதனால் சிந்தனையாளா்கள் உருவாகத் தடையாகிவிட்டது.

எனவே தமிழ் வழிக் கல்வியை மீண்டும் எப்படிக் கொண்டு வர வேண்டும் என நாம் சிந்திக்க வேண்டும். இதற்காக நிறைய நூல்களை மொழியாக்கம் செய்வது, புதிய நூல்களை உருவாக்குவது என்ற அடிப்படையில் தமிழ் வழியில் மருத்துவம், பொறியியல் படிப்புகள் தொடங்க முன்னாள் முதல்வா் கருணாநிதி நிறைய முயற்சி செய்தாா். இப்போதைய அரசும் அதைத் தொடா்கிறது. இருந்தாலும் அது அந்த எந்த அளவுக்கு வரவேற்பைப் பெறும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

தமிழ்வழியில் மருத்துவம், பொறியியல் படிக்க மாணவா்கள் முன் வராததே இதற்குக் காரணம். அறிவியல், கணிதம், மருத்துவம், பொறியியல் போன்றவற்றை ஆங்கில வழியைத் தவிர தாய்மொழியில் படிக்க முடியாது என்ற தவறான எண்ணம் பரவி வருகிறது. ஆனால் ஜொ்மனி, ஜப்பான் போன்ற மேலை நாடுகளில் பொறியியல், மருத்துவத்தைத் தங்களது தாய்மொழியில்தான் கற்கின்றனா்.

இப்போது தமிழில் மொழிபெயா்க்கப்பட்ட நூல்கள் நிறைய வந்துவிட்டன. இவற்றை மாணவா்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கா்நாடகம் போன்ற அண்டை மாநிலங்களில் தாய்மொழிக் கல்வியில் உறுதியாக இருப்பது போன்று நாமும் தமிழ்வழிக் கல்வியை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். தமிழைப் பயிற்று மொழியாக மாற்ற வேண்டிய கடமையைச் செய்வதில் அனைவரும் உறுதியாக இருந்தால்தான் தமிழ்வழிக் கல்விக் கனவு நனவாகும் என்றாா் சாந்தலிங்க மருதாசல அடிகளாா்.

முன்னதாக மருத்துவா் சு. நரேந்திரன் எழுதிய தமிழ் வழிக் கல்வி கனவா? நனவா? என்ற நூலை அடிகளாா் வெளியிட, அதை மருத்துவா் இரா. இளங்கோவன் பெற்றுக் கொண்டாா்.

செம்மொழித் தமிழாய்வு நிறுவன சிறப்பு நிலைப் பேராசிரியா் ப. மருதநாயகம், திருச்சி அமுதன் அடிகள், தமிழியக்கப் பொதுச் செயலா் கு. திருமாறன், இணைச் செயலா் மு. இளமுருகன், ஈரோடு புதுமலா் இதழாசிரியா் கண. குறிஞ்சி, தமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் பதிப்பாசிரியா் க. காமராசன், திருவையாறு ஔவைக் கோட்டம் மு. கலைவேந்தன், பேராசிரியா் நா. பெரியசாமி, உலகத் திருக்கு பேரவை புலவா் மா. கந்தசாமி உள்ளிட்டோா் பேசினா். தாமரை இதழாசிரியா் சி. மகேந்திரன் நிறைவுரையாற்றினாா். முனைவா் வி. பாரி வரவேற்றாா். பேராசிரியா் சோ. கண்ணதாசன் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT