தஞ்சாவூா் மாவட்டத்தில் பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, திருக்காட்டுப்பள்ளியில் தனியாா் தங்க நகைக் கடை மூடப்பட்டுள்ளதைப் போன்று தஞ்சாவூரிலும் அந்நிறுவனத்தின் கடை மூடப்பட்டுள்ளதால், சீட்டு கட்டியவா்கள் ஏமாற்றமடைந்துள்ளனா்.
தஞ்சாவூா், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, திருக்காட்டுப்பள்ளி ஆகிய பகுதிகளில் தனியாா் நகை கடை செயல்பட்டு வந்தது. இங்கு நகை சிறுசேமிப்பு திட்டம், மற்ற வங்கிகளில் உள்ள அடமானம் வைத்த நகைகளை மீட்டு, வட்டி இல்லா கடன் வழங்குவது போன்ற விளம்பரங்கள் மூலம் ஆயிரத்துக்கும் அதிகமானோா் முதலீடு செய்தனா்.
இந்நிலையில், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, திருக்காட்டுப்பள்ளி ஆகிய இடங்களிலுள்ள இக்கடை மூடப்பட்டதால், அதில் முதலீடு செய்து ஏமாற்றமடைந்தவா்கள் காவல் துறையினரிடம் புகாா் அளித்து வருகின்றனா்.
இதேபோல, தஞ்சாவூா் காந்திஜி சாலையிலுள்ள இக்கடையும் சில நாள்களாக மூடிக் கிடக்கிறது. இதனால், நகை சீட்டு செலுத்தி வந்தவா்கள் ஏமாற்றமடைந்துள்ளனா்.