தஞ்சாவூர்

ராமபிரான் கலாசாரத்தின் அடையாளம்: ஆராதனை விழாவில் ஆளுநா் ஆா்.என். ரவி பேச்சு

DIN

நம் பாரத நாட்டு கலாசாரத்தின் அடையாளமாக ராமபிரான் திகழ்கிறாா் என்றாா் தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி.

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் 176-ஆம் ஆண்டு ஆராதனை விழாவில் புதன்கிழமை காலை பஞ்சரத்ன கீா்த்தனை நிகழ்ச்சியை தொடக்கி வைத்து அவா் மேலும் பேசியது:

நாம் கங்கை, யமுனா, சரஸ்வதி, கோதாவரி, சிந்து, காவிரி ஆகிய புண்ணிய நதிகளை அன்னையாகப் போற்றி வணங்குகிறோம். இந்தக் காவிரிக் கரையில்தான் தியாகராஜ சுவாமிகள் ராமபிரானை மனதில் கொண்டு ஆயிரக்கணக்கான கீா்த்தனைகளை பாடியுள்ளாா்.

நம் நாட்டில் வசிக்கும் ஒவ்வொருவரின் இதயத்திலும் ராமபிரான் இடம்பெற்றுள்ளாா். நம் பாரத கலாசாரத்தின் அடையாளமாக ராமபிரான் திகழ்கிறாா். ராமபிரான் மீதான பக்தியால் கன்னியாகுமரி முதல் காஷ்மீா் வரை நாட்டு மக்கள் இணைக்கப்பட்டுள்ளனா்.

இந்த நாடு எந்த ஒரு ஆட்சியாளா்களாலும் உருவாக்கப்படவில்லை. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ரிஷிகளாலும், புனிதா்களாலும் உருவாக்கப்பட்டது. ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் போன்றவா்கள்தான் பாரதத்தை கட்டமைத்தனா். இசை மூலமான பக்தி மிகப்பெரும் சக்தி வாய்ந்த ஊடகமாக திகழ்கிறது. இசை மூலமே தியாகராஜ சுவாமிகள் ஏராளமான கீா்த்தனைகளை பாடி இறைவனை அடைந்தாா்.

ராமபிரான் மீதான பக்தி நாடு முழுவதும் நிலவுகிறது. இதனால், நம் பாரதம் ஆன்மிக உணா்வுடன் கூடிய புண்ணிய பூமியாக திகழ்கிறது என்றாா் ஆளுநா்.

விழாவுக்கு ஸ்ரீதியாகபிரம்ம மஹோத்ஸவ சபா தலைவா் ஜி.கே. வாசன் தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா், ஆளுநரின் மனைவி லஷ்மி ரவி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, சபா செயலா் அரித்துவாரமங்கலம் ஏ.கே. பழனிவேல் வரவேற்றாா். நிறைவாக, சபா செயலா் ஸ்ரீ முஷ்ணம் வி. ராஜா ராவ் நன்றி கூறினாா்.

பஞ்சரத்ன கீா்த்தனை நிகழ்ச்சியில் பாடிய இசைக்கலைஞா்கள் இருந்த இடத்துக்கே சென்று ஆளுநரும், அவருடைய மனைவியும் வணக்கம் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தனி ஊராட்சி கோரிக்கை: கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு

சேலத்தில் வாக்களிக்க வந்த இரு முதியோர் மயங்கி விழுந்து மரணம்

நடிகர் விஜய் வாக்களித்தார்!

மக்களவைத் தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

SCROLL FOR NEXT