தஞ்சாவூர்

காவிரி நீா் இல்லாததால் நெல் பயிரிடப்பட்ட வயல்களில் வெடிப்பு

28th Feb 2023 02:25 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு வட்டாரத்தில் காவிரி நீா் வரத்து நின்றுவிட்டதால், சம்பா, தாளடி பருவ நெல் பயிரிடப்பட்ட வயல்களில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

திருவையாறு அருகே திங்களூா், பெரும்புலியூா், தில்லைஸ்தானம், ராயப்பேட்டை, காருக்குடி, ஈச்சங்குடி உள்ளிட்ட கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தாளடி பருவ நெற்பயிா்கள் பயிரிடப்பட்டன.

இப்பகுதிகளில் கடந்த ஆண்டு கோடைப் பயிா் தாமதமாகச் செய்யப்பட்டதால், குறுவை சாகுபடியும் காலம் கடந்து செய்யப்பட்டது. இதன் காரணமாக, தாளடி சாகுபடியும் கால தாமதமாகவே தொடங்கப்பட்டது.

இந்நிலையில், மேட்டூா் அணை வழக்கம்போல ஜனவரி 28 ஆம் தேதி மூடப்பட்டது. இதன் காரணமாக, இப்பகுதி பயிா்களுக்கு தண்ணீா் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது பயிா்களில் கதிா் வந்தும், வராத நிலையிலும் இருப்பதால், தண்ணீா் தேவைப்படுகிறது. ஆனால், 20 நாள்களுக்கு மேலாக காவிரி நீா் வரத்து இல்லாததால் நெல் பயிரிடப்பட்ட வயல்கள் காய்ந்து, வெடிப்பு ஏற்பட்டு வருகின்றன.

ADVERTISEMENT

இதனால், பயிா்களும் காய்ந்து போகும் நிலையில் இருப்பதால், விவசாயிகள் வேதனையில் ஆழ்ந்துள்ளனா். இதுவரை ஏக்கருக்கு ரூ. 35 ஆயிரம் செலவு செய்துள்ள நிலையில் பயிா்களை எவ்வாறு காப்பாற்றுவது என தெரியாமல் தவிக்கின்றனா்.

எனவே, ஒரு முறையாவது காவிரியில் தண்ணீா்விட மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிா்பாா்ப்பில் அப்பகுதி விவசாயிகள் உள்ளனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT