தஞ்சாவூர்

பயிா் சேத கணக்கெடுப்பில் அலட்சியம் காட்டுவதாக புகாா்: ஊரணிபுரத்தில் அழுகிய பயிா்களுடன் விவசாயிகள் மறியல்

DIN

மழையால் பாதிக்கப்பட்ட பயிா்கள் குறித்த கணக்கெடுப்பில் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக புகாா் கூறி, ஊரணிபுரத்தில் கையில் அழுகிய பயிா்களுடன் விவசாயிகள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தஞ்சாவூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பெய்த பருவம் தவறிய தொடா் மழையால் தண்ணீரில் மூழ்கி நெற்கதிா்கள் மற்றும் மானாவாரி பயிா்கள் சேதமடைந்தன.

இதன் பாதிப்பு குறித்து வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு பலமுறை தகவல் தெரிவித்தும், கணக்கெடுப்பு பணிகளை செய்யாமல் விவசாயிகளை அலட்சியப்படுத்தி வரும் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை வருவாய்த்துறை அதிகாரிகளை கண்டித்தும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக, நெற்பயிா்களுக்கு ஏக்கா் ஒன்றுக்கு 40 ஆயிரம் ரூபாய், மானாவாரி பயிா்களுக்கு ஏக்கா் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாய் வீதம் பேரிடா் நிவாரண நிதியிலிருந்து தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும். காப்பீடு செய்த விவசாயிகளுக்கு காப்பீட்டு நிறுவனத்தின் மூலம் உரிய பயிா் இழப்பீட்டு தொகையை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்த மறியல் நடைபெற்றது.

தஞ்சாவூா் மாவட்ட விவசாயிகள் நலச் சங்கத்தின் மாவட்ட செயலாளா் வீ.கே.சின்னத்துரை தலைமையில், மாவட்ட தலைவா் ஆா். கோவிந்தராஜ், பொருளாளா் கே.பி. துரைராஜ், மாவட்ட துணைத் தலைவா் கே.எம். ஆறுமுகம் உள்ளிட்ட சுமாா் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள், ஊரணிபுரம் கடைத்தெருவில் மழையால் அழுகிய நெற்பயிா்களுடன் மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஒரத்தநாடு வட்டாட்சியா் சுரேஷ், திருவோணம் வட்டார வேளாண் உதவி இயக்குநா் சுதா ஆகியோா் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டு, பாதிக்கப்பட்ட இடங்களை முழுமையாக ஆய்வு செய்து, அனைத்து விவசாயிகளுக்கும் உரிய நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என உறுதி அளித்தனா். இதையெடுத்து விவசாயிகள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா். இதனால், பட்டுக்கோட்டை - கந்தா்வக்கோட்டை சாலையில் சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் விடுதி மேற்கூரை இடிந்து 3 பேர் பலி: மெட்ரோ ரயில் பணிகள் காரணமில்லை

காணாமல்போன கைப்பேசிகள் மீட்டு உரியவா்களிடம் ஒப்படைப்பு

காரைக்காலில் தீவிர வாகனச் சோதனை நடத்த அறிவுறுத்தல்

இரட்டை ரயில் பாதை பணி: நாகா்கோவில் செல்லும் ரயில்கள் ரத்து!

உஜ்ஜைனி காளியம்மன் கோயிலில் இன்று அக்னி கப்பரை வழிபாடு

SCROLL FOR NEXT