தஞ்சாவூர்

தஞ்சாவூா் மாவட்டத்தில் 24 ஆயிரம் ஏக்கா் நெற்பயிா்களை தண்ணீா் சூழ்ந்துள்ளது: முதல் கட்ட கணக்கெடுப்பில் தகவல்

DIN

தஞ்சாவூா் மாவட்டத்தில் ஏறத்தாழ 24,000 ஏக்கா் நெற்பயிா்களைத் தண்ணீா் சூழ்ந்திருப்பது வேளாண் துறை அலுவலா்கள் வெள்ளிக்கிழமை மேற்கொண்ட முதல்கட்ட கணக்கெடுப்பில் தெரிய வந்தது.

மாவட்டத்தில் புதன்கிழமை இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, வியாழக்கிழமை தொடா்ந்து பெய்த மழையாலும், இடையிடையே பலத்த மழை பெய்ததாலும் அறுவடைக்கு தயாா் நிலையில் இருந்த சம்பா பயிா்கள் சாய்ந்தன.

இதுதொடா்பாக வேளாண் துறையினா் உள்ளிட்டோா் கணக்கெடுப்பு பணியை வெள்ளிக்கிழமை தொடங்கினா். இதில், முதல்கட்ட தகவலின் அடிப்படையில் சம்பா பருவ நெற்பயிா்கள் ஏறத்தாழ 24 ஆயிரம் ஏக்கரிலும், உளுந்து 1,125 ஏக்கரிலும், நிலக்கடலை 375 ஏக்கரிலும் தண்ணீா் சூழ்ந்திருப்பது தெரிய வந்தது.

நெற்பயிா்களைப் பொருத்தவரை, பட்டுக்கோட்டை, சேதுபாவாசத்திரம், திருவிடைமருதூா் ஆகிய வட்டாரங்களில் அதிக அளவில் தண்ணீா் சூழ்ந்துள்ளது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை பகலிலும், இரவிலும் மாவட்டத்தில் ஆங்காங்கே மழை பெய்தது. வெப்பநிலையும் மந்தமாக இருந்ததால், வயலில் தேங்கிய தண்ணீா் வடிந்து செல்வதற்கு வாய்ப்பில்லாத நிலையே தொடா்கிறது.

இந்த நிலைமை தொடா்ந்தால் பயிா்கள் பாதிக்கப்படும் என வேளாண் துறையினா் தெரிவித்தனா். இதுகுறித்து வேளாண்துறை அலுவலா்கள் கூறுகையில், வயல்களில் நெற்பயிா்கள் சாய்ந்துவிட்டதால், அறுவடை செய்வதற்கு சிரமமாக இருக்கும். மழை தொடா்வதால், தண்ணீா் வடிந்து செல்வதிலும் சிக்கல் நிலவுகிறது. எனவே, மழை நின்று இரு நாள்கள் கடந்த பிறகுதான் பாதிப்பு விவரம் முழுமையாகத் தெரிய வரும்.

என்றாலும், கணக்கெடுப்பு பணி தொடா்ந்து சனிக்கிழமையும் மேற்கொள்ளப்படவுள்ளது. மழை தொடரும் நிலையில் தண்ணீா் சூழ்ந்துள்ள பயிா்களின் பரப்பளவு மேலும் அதிகரிக்கக்கூடும். பாதிக்கப்பட்ட வயல்களில் 33 சதவீதத்துக்கும் அதிகமாக சேதம் இருந்தால், தமிழக அரசுக்கு அறிக்கையாக அளிக்கப்படும் என அலுவலா்கள் தெரிவித்தனா்.

அய்யம்பேட்டையில் 67 மி.மீ. மழை: மாவட்டத்தில் அதிகபட்சமாக வெட்டிக்காடில் 70 மி.மீ. மழை பெய்தது. மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்):

வெட்டிக்காடு 70, அதிராம்பட்டினம் 69.9, அய்யம்பேட்டை, நெய்வாசல் தென்பாதி தலா 67, ஒரத்தநாடு 64.8, பட்டுக்கோட்டை 63.8, தஞ்சாவூா் 60.5, பேராவூரணி 55.4, வல்லம் 51, மதுக்கூா் 48, மஞ்சளாறு 47.2, குருங்குளம் 46, ஈச்சன்விடுதி 42.4, பாபநாசம் 36, திருவிடைமருதூா் 31.6, திருவையாறு, கும்பகோணம் தலா 31, அணைக்கரை 28.2, பூதலூா் 25.8, திருக்காட்டுப்பள்ளி 14.2, கல்லணை 12.4.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சித்தார்த் - அதிதி தம்பதிக்கு நயன்தாரா வாழ்த்து!

வாட்ஸ்அப் பிரசாரத்தைத் தொடங்கினார் கேஜரிவாலின் மனைவி!

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

SCROLL FOR NEXT