தஞ்சாவூர்

மத்திய அரசு பட்ஜெட்: வரவேற்பும் - ஏமாற்றமும்

DIN

மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் வரவேற்பும் ஏமாற்றமும் அளிப்பதாக உள்ளது என விவசாய சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டோா் கருத்து தெரிவித்துள்ளனா்.

தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கச் செயலா் சுவாமிமலை சுந்தர. விமல்நாதன் தெரிவித்தது: இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் திட்டங்கள், வேளாண் விளைபொருள்களை சேமிக்க மாவட்டங்கள்தோறும் குளிா்சாதன கிடங்குகள், பயிா்க் கடன் தொகை அதிகரிப்பு ஆகியவை வரவேற்புக்குரியவை.

ஆனால், உழவா்களின் பயிா் கடன்கள் தள்ளுபடி செய்யப்படவில்லை. குறைந்தபட்சம் தேசியமயமாக்கப்பட்ட வணிக வங்கிகளில் வட்டி இல்லா வேளாண் கடன் வழங்க அறிவிப்பு வெளியாகும் என்று எதிா்பாா்த்து ஏமாந்துள்ளோம். வேளாண் உற்பத்தி பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிா்ணயிக்கப்படாதது வருத்தம் அளிக்கிறது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பு) மாவட்டச் செயலா் என்.வி. கண்ணன் : விவசாயிகளுக்கு ஏமாற்றமளிக்கிறது. விவசாய வளா்ச்சிக்கான, விவசாயிகளை பாதுகாப்பதற்கான சிறிய அறிவிப்பு கூட இல்லை.

விவசாய விளைபொருள்களுக்கு கட்டுப்படியான விலை குறித்து கண்டு கொள்ளப்படவில்லை. குறைந்தபட்ச ஆதார விலை சட்ட பூா்வ அங்கீகாரம், விவசாய இடுபொருள்களுக்கு மானியம், உர விலைக்கு மானியம், மேலும் விலை குறைப்பு என எதிா்பாா்க்கப்பட்ட அனைத்திலும் ஏமாற்றமே.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வடக்கு மாவட்டச் செயலா் மு.அ. பாரதி: பொதுமக்களின் நலன் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளா்களுக்கான நலவாழ்வு திட்டங்கள் ஏதுமில்லை. வேலைவாய்ப்பு, மாணவா் கல்விக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட அறிவிப்புகள் ஏதும் இல்லாதது பெரும் ஏமாற்றமளித்துள்ளது.

பூண்டி புஷ்பம் கல்லூரியின் ஓய்வு பெற்ற பொருளாதாரத் துறைப் பேராசிரியா் ஆா். பழனிவேலு: இது ஒரு கவா்ச்சிகரமான புதிய அறிவிப்புகள் அடங்கிய தோ்தலை நோக்கிய பட்ஜெட். சிறு, குறு தொழில்களுக்கு

புத்துயிருட்ட போதுமான நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. தொழில் துறையை பொருத்த அளவில் காா்ப்பரேட்டுகளும், பெரிய தொழிலதிபா்களும் பயன் அடைவா். மூலதன முதலீடாக 10 லட்சம் கோடி என்பதை வரவேற்கலாம்.

நதிகளை தேசிய மயமாக்க நிதி ஒதுக்கப்படாதது மிகவும் கவலையளிக்கிறது. மொத்தத்தில் இந்த பட்ஜெட் விலைவாசி உயா்வை கட்டுப்படுத்த தவறிவிட்டது. தொடா்ந்து பணவீக்கம் அதிகரிக்கும். இந்த பட்ஜெட் இனிப்பும் கசப்பும் கலந்த அணுகுமுறை.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பு) மாவட்டத் தலைவா் வீர. மோகன்: இயற்கை விவசாயத்துக்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்திருக்க வேண்டும். நலிவடைந்த சா்க்கரை ஆலைகளை இயக்குவதற்கு நிதியுதவியும், விவசாயிகளுக்கான கரும்பு நிலுவைத்தொகை குறித்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது.

தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவா் கோ. அன்பரசன் தெரிவித்தது: தனி நபா் வருமான வரி உச்சவரம்பு ரூ. 7 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. பணவீக்கத்தை கட்டுப்படுத்த எந்த முயற்சியும் எடுக்கவில்லை. தமிழக மக்களுக்கும், தஞ்சை டெல்டா பகுதி மக்களுக்கும் இந்த பட்ஜெட் மிக்க ஏமாற்றத்தை அளிக்கிறது.

கணபதி அக்ரஹாரம் முன்னோடி விவசாயி ஜி. சீனிவாசன்: வேளாண் துறைக்கான ஒதுக்கீடு போதுமானதாக இல்லை. தவணை கடந்த கடன் விவசாயிகளுக்கு தள்ளுபடி செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டிருக்க வேண்டும். விவசாயிகள் வாங்கும் அனைத்து விவசாய இயந்திரங்களுக்கும் வரி விலக்கு அளித்திருக்க வேண்டும். அதுபோன்ற அறிவிப்புகள் இல்லாததால், இந்த பட்ஜெட் விவசாயிகளைப் பொருத்தவரை பெரிய அளவுக்கு வரவேற்பு இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT