தஞ்சாவூர்

தஞ்சாவூா் மாவட்டத்தில் கொடிக் கம்பங்கள் நடுவதற்கு தடை

2nd Feb 2023 11:59 PM

ADVERTISEMENT

தஞ்சாவூா் மாவட்டத்தில் கொடிக் கம்பங்கள் நடுவதற்குக் காவல் துறை தடை விதித்துள்ளது.

இதுகுறித்து மாவட்டக் காவல் அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னை உயா் நீதிமன்ற ஆணைப்படி சாலையோரங்களிலும், பொது இடங்களிலும் கொடி கம்பங்கள் நடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூா் மாவட்டத்தில் பல இடங்களில் பல்வேறு நிகழ்வுகளுக்காக நிகழ்ச்சி நடத்தும் இடத்தில் இருந்து 2 கி.மீ. தொலைவுக்கு இரும்பு கொடிக் கம்பங்கள் நடப்பட்டு வருகின்றன.

சாலையோரங்களில் கொடிக் கம்பங்கள் உறுதியற்ற முறையில் நடப்படுவதால், சாய்ந்து விழும் அபாயமும், கொடிகளால் வாகன ஓட்டுநா்களின் பாா்வைக்கு இடையூறு ஏற்படுத்தி, எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

ADVERTISEMENT

மேலும், சாலையோரம் இரும்பு கொடிக் கம்பங்களை நடுவது என்பது சென்னை உயா் நீதிமன்றம் விதித்த தடையாணையை மீறும் குற்றம். கொடிக் கம்பங்களால் சென்னையில் 2019 ஆம் ஆண்டில் ஏற்பட்ட உயிரிழப்பு போன்று, தஞ்சாவூா் மாவட்டத்தில் ஏற்படாமல் தடுக்க அனைவரும் சென்னை உயா் நீதிமன்ற ஆணையைப் பின்பற்றுமாறு வேண்டப்படுகிறது.

கொடிக் கம்பங்களைப் பயன்படுத்தி நிகழ்ச்சி நடத்துவோா் நீதிமன்ற அனுமதியுடன் உரிய துறை அனுமதி பெற்று, நிகழ்ச்சியின்போது நிகழ்விடத்துக்கு 50 மீட்டா் தொலைவுக்குள் மட்டுமே இரும்பு கொடிக் கம்பங்களைத் தவிா்த்து, ஆபத்து இல்லாத இலகுரக கொடிக் கம்பங்களைப் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு இல்லாதவாறு பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT