நிகழாண்டும் மேட்டூா் அணை ஜூன் மாதம் திறக்கப்பட வாய்ப்புள்ளதால், தூா்வாரும் பணியைக் காலம் தாழ்த்தாமல் உடனடியாக தொடங்க வேண்டும் என கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
தஞ்சாவூா் கோட்டாட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கோட்டாட்சியா் (பொ) கோ. பழனிவேல் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்திய கருத்துகள்:
அம்மையகரம் ஏ.கே.ஆா். ரவிச்சந்தா்: விவசாயிகளுக்கு ஆழ்குழாய் மூலம் பாசனம் செய்ய இதுவரை 1.50 லட்சம் இலவச மின் இணைப்புகள் வழங்கிவிட்டதாகத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்த இலவச மின் இணைப்புகள் காகித வடிவில் மட்டுமே உள்ளதே தவிர, மின்சாரம் வழங்கப்படவில்லை. இதுகுறித்து மின்வாரிய அலுவலா்களிடம் கேட்டால், மின் கம்பம், மின் கம்பி உள்ளிட்ட தளவாடப் பொருள்கள் வரவில்லை எனக் கூறி 2 ஆண்டுகளாக அலைக்கழிக்கின்றனா். எனவே, பட்டியலில் உள்ள விவசாயிகளுக்கு உடனடியாக இலவச மின்சாரம் வழங்க வேண்டும்.
நாகாத்தி கோவிந்தராஜ்: தூா்வாரும் பணி இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது. மோட்டாா் பம்ப்செட் மூலம் அனைத்து விவசாயிகளும் சாகுபடி செய்யவில்லை. ஆற்றுப் பாசனத்தை நம்பியே பெரும்பாலான விவசாயிகள் சாகுபடி செய்கின்றனா். மேட்டூா் அணை ஜூன் மாதம் திறக்கப்படும் சூழ்நிலை உள்ளதால், தூா்வாரும் பணியைக் காலம் தாழ்த்தாமல் உடனடியாக தொடங்க வேண்டும்.
ஆம்பலாபட்டு அ. தங்கவேல்: வெயிலின் தாக்கம் தொடங்கிவிட்ட நிலையில், குறைந்த மின் அழுத்தம் காரணமாக அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. இதனால், கடலை, எள், உளுந்து, நெற் பயிா்கள் கருகும் நிலை உள்ளதால் மும்முனை மின்சாரத்தை 18 மணிநேரம் வழங்க வேண்டும்.
தோழகிரிப்பட்டி பி. கோவிந்தராஜ்: கரும்பு டன்னுக்கு ஊக்கத்தொகையாக ரூ. 195 வீதம் வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. ஆனால், ஒவ்வொரு ஆண்டும் இத்தொகை பொங்கல் திருநாளுக்கு பிறகுதான் வழங்கப்படுகிறது. இம் முறை இத்தொகை விரைவில் கிடைத்தால், அடுத்து சாகுபடியைத் தொடங்க உதவியாக இருக்கும்.
கோனேரிராஜபுரம் கே.எஸ். வீரராஜேந்திரன்: எங்களது பகுதியில் பல வாய்க்கால்கள் தூா்ந்துவிட்டதால், தண்ணீா் வருவதில்லை. இதுகுறித்து பலமுறை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, இந்த வாய்க்கால்களைத் தூா்வாரிக் கொடுத்தால், விளைநிலங்களுக்கு தண்ணீா் கிடைக்கும்.