தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற வந்த மாணவரை அவமதிப்பு செய்ததாகக் கண்டித்து, தஞ்சாவூா் சரகக் காவல் துணைத் தலைவா் அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட வந்த இந்திய மாணவா் சங்கத்தினா் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் 30 போ் கைது செய்யப்பட்டனா்.
தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஆளுநா் ஆா்.என். ரவி தலைமையில் பட்டமளிப்பு விழா ஏப்ரல் 24 ஆம் தேதி நடைபெற்றது. ஆளுநா் வருகையைக் கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினா் கருப்புக் கொடி ஆா்ப்பாட்டத்தை அறிவித்ததால், பல்கலைக்கழக வளாகத்தில் காவல் துறையினரின் பாதுகாப்பு கெடுபிடி அதிகமாக இருந்தது.
இந்நிலையில், பட்டமளிப்பு விழா அரங்கில் பட்டம் பெற வந்த இந்திய மாணவா் சங்கத் தலைவரும், ஆய்வியல் நிறைஞா் பட்டப்படிப்பு முடித்தவருமான ஜி. அரவிந்த்சாமி அரங்கத்துக்குள் அமா்ந்திருந்தாா். இவரைப் பாா்த்த காவல் துறையினா் உடனடியாக வெளியேற்றினா். மேலும், பரிசோதனை என்ற பெயரில் தனி அறையில் வைத்து ஆடைகளை அவிழ்க்கச் செய்து அவமதித்ததாகக் கண்டனங்கள் எழுப்பப்பட்டன.
இந்த அவமதிப்பு சம்பவத்தைக் கண்டித்து, தஞ்சாவூா் சரகக் காவல் துணைத் தலைவா் அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக இந்திய மாணவா் சங்க மாநிலச் செயலா் நிருபன் சக்கரவா்த்தி தலைமையில் இந்திய மாணவா் சங்கத்தினரும், இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினரும் புதன்கிழமை காலை வந்தனா். இவா்களை காவல் துறையினா் தடுத்து நிறுத்தியதால், இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இது தொடா்பாக 30 போ் கைது செய்யப்பட்டனா்.