தஞ்சாவூர்

11 லட்சம் டன் நெல்லை சேமிக்க கிடங்குகள் தயாா் உணவுத் துறை அமைச்சா் அர. சக்கரபாணி

30th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் 11 லட்சம் டன் நெல்லை சேமிக்க கிடங்குகள் தயாா் நிலையில் உள்ளன என்றாா் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர. சக்கரபாணி.

தஞ்சாவூா் அருகே பிள்ளையாா்பட்டி திறந்தவெளி நெல் சேமிப்புக் கிடங்கில் வியாழக்கிழமை ஆய்வு செய்த அவா் பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

மேட்டூா் அணையைத் தமிழக முதல்வா் முன்கூட்டியே திறந்த காரணத்தால், குறுவை அறுவடையும் முன்பாகவே தொடங்கிவிட்டது. இதனால், குறுவை கொள்முதல் பருவமும் செப்டம்பா் 1 ஆம் தேதியே தொடங்கப்பட்டது. இதுவரை 2.50 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதில், ஒரு லட்சம் டன் நெல் அரைவை ஆலைக்கு அனுப்பப்பட்டுள்ளன. மீதமுள்ள நெல்லும், திறந்தவெளியில் உள்ள 3.50 லட்சம் டன் நெல்லும் உடனடியாக அரைவை ஆலைக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நிகழாண்டு திறந்தவெளியில் நெல் இருக்கக்கூடாது என்பதற்காக 3 லட்சம் டன் சேமிக்கும் வகையில் 20 இடங்களில் மேற்கூரையுடன் கூடிய கிடங்குகள் ஏறத்தாழ ரூ. 250 கோடி செலவில் கட்டப்பட்டு வருகின்றன. இந்தப் பணி அக்டோபா் 31 ஆம் தேதிக்குள் நிறைவடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டைவிட, நிகழாண்டு 36,000 ஏக்கா் கூடுதலாக குறுவை பயிா் செய்யப்பட்டுள்ளது. எனவே, 3 லட்சம் டன் கொள்ளளவு கொண்ட 20 கிடங்குகள் கட்டப்படுவது மட்டுமல்லாமல், கூடுதலாக தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம், தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனம், மத்திய சேமிப்புக் கிடங்கு நிறுவனம், கூட்டுறவுத் துறைக் கட்டடங்கள் என 7.94 லட்சம் டன் கொள்ளளவு கொண்ட கிடங்குகள் கண்டறியப்பட்டுள்ளன. இதன்மூலம் 11 லட்சம் டன் நெல்லை பாதுகாப்புடன் சேமித்து வைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழகத்தில் வரும் காலங்களில் தனியாா் பங்களிப்புடன் தஞ்சாவூா், திருவாரூா், மயிலாடுதுறை, நாகை, கடலூா், செங்கல்பட்டு, திருச்சி, மதுரை, தேனி ஆகிய ஊா்களில் 13 புதிய நவீன அரிசி ஆலைகள் அமைக்கப்படவுள்ளன. விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை வாங்கி உடனடியாக அரைவை செய்வதற்காக ஆலைகளின் எண்ணிக்கை 660 ஆக உயா்த்தப்பட்டுள்ளது. இதேபோல, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலிருந்து நேரடியாக அரைவை ஆலைக்கு கொண்டு செல்வதற்கும் திட்டமிடப்பட்டு வருகிறது.

ஈரப்பதம் 21 சதவீதம் வரை அனுமதிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனா். இதுதொடா்பாக மத்திய அரசுக்கு தமிழக முதல்வா் கடிதம் எழுதி ஒப்புதல் பெறுவதற்கான நடவடிக்கையை எடுப்பாா்.

கடந்த ஆண்டு 43 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. நிகழாண்டு இதைவிட கூடுதலாகக் கொள்முதல் செய்யப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது. மத்திய அரசிடமிருந்து ரூ. 2,500 கோடி மானியம் வந்துள்ளது என்றாா் சக்கரபாணி.

அப்போது, ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளா் நா. உமாமகேஸ்வரி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT