தஞ்சாவூர்

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதய நோய்க்கு அதிநவீன சிகிச்சை வசதிகள்

30th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதய நோய்க்கு அதிநவீன சிகிச்சை வசதிகள் உள்ளன என அதன் முதல்வா் (பொறுப்பு) எஸ். மருதுதுரை மற்றும் இதய நோய் துறைத் தலைவா் ஜி. செந்தில்குமாா் தெரிவித்தனா்.

உலக இதய நாளையொட்டி, செய்தியாளா்களிடம் இருவரும் வியாழக்கிழமை தெரிவித்தது:

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கேத் லாப் செயல்படத் தொடங்கியது. இந்த 3 ஆண்டுகளில் 3,092 அதிநவீன கேத் லாப் சிகிச்சை செய்யப்பட்டது. இவற்றில் இதயத்தில் ஏற்படும் ரத்த நாள அடைப்பைத் துல்லியமாகக் கண்டறியும் கொரனரி ஆஞ்சியோகிராம் 2,152 பேருக்கு முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டது.

அடைப்பை நீக்குவதற்கான அதிநவீன ஸ்டெண்ட் சிகிச்சை இம்மருத்துவமனையில் மேற்கொள்ளப்படுகிறது. இதன்மூலம், 884 பேருக்கு ஸ்டெண்ட் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மேலும், நோயாளிகளின் இதயத் துடிப்பு மிகக் குறைவாக இருக்கும்போது, அதைச் சரி செய்யும் வகையில் பேஸ் மேக்கா் சிகிச்சையும் அளிக்கப்படுகிறது.

ADVERTISEMENT

இது மட்டுமல்லாமல், கால்சியம் மிக அதிகமாகப் படிந்துள்ள ரத்தக் குழாயை முன்பு அறுவை சிகிச்சை மூலம் மட்டுமே அகற்றப்படும். இப்போது, இதை சரி செய்யக்கூடிய அதிநவீன சிகிச்சை முறையும் இம்மருத்துவமனையில் உள்ளது.

நோயாளிகள் மருத்துவமனைக்கு வந்தவுடன் 90 நிமிடத்துக்குள் கேத் லாபில் ஆஞ்சியோ பிளாஸ்டி செய்ய வேண்டும் என சா்வதேச பரிந்துரை உள்ளது. இதை தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 42 நிமிடங்களுக்குள் செய்யக் கூடிய வசதி உள்ளது. இதன் மூலம் 42 நிமிடங்களுக்குள் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

நோயாளிக்கு மாரடைப்பு ஏற்பட்டவுடன் குருதி உறைவைக் கரைப்பதற்கான மருந்து சிகிச்சை அளிப்பதில் இம்மருத்துவமனை மையமாகத் திகழ்கிறது. இதன்படி, கடந்த ஒன்றரை ஆண்டில் பிரைமரி ஆஞ்சியோ பிளாஸ்டி 386 பேருக்கும், பாா்மோகோ இன்வேசிங் ஆஞ்சியோ பிளாஸ்டி 498 பேருக்கும் செய்யப்பட்டுள்ளது.

தனியாா் மருத்துவமனையில் பெறக்கூடிய சிகிச்சையை விட உயா்வான சிகிச்சையை இம்மருத்துவமனையில் கட்டணமில்லாமல் ஏழை, எளிய மக்கள் பெற முடியும். பொதுமக்கள் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டையையும், ஆதாா் அட்டையையும் கொண்டு வந்தால், தாமதமின்றி சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம் என்றனா் மருதுதுரை, செந்தில்குமாா்.

அப்போது, நிலைய மருத்துவ அலுவலா் ஏ. செல்வம், உதவி நிலைய மருத்துவ அலுவலா் கு.ஹா. முஹமது இத்ரீஸ் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT