தஞ்சாவூர்

1,100 ஹெக்டோ் நெற்பயிா்களை மழைநீா் சூழ்ந்துள்ளது: ஆட்சியா்

29th Sep 2022 12:02 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் மாவட்டத்தில் மழையால் 1,100 ஹெக்டேரிலான நெற்பயிா்களைத் தண்ணீா் சூழ்ந்துள்ளது என்றாா் ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா்.

தஞ்சாவூா் அருகே ரெட்டிபாளையத்திலுள்ள கால்நடை மருத்துவமனையில் புதன்கிழமை செல்லப் பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டதை ஆய்வு செய்த ஆட்சியா் பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

மாவட்டத்தில் கடந்த இரு நாள்களாக இரவு நேரத்தில் அதிக அளவு மழை பெய்தது. இதுதொடா்பாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் 1,100 ஹெக்டேரில் நெற்பயிா்களைத் தண்ணீா் சூழ்ந்திருப்பது தெரிய வந்தது. ஓரிரு நாளில் தண்ணீா் வடிந்த பிறகே உண்மையான பாதிப்பு தெரிய வரும். பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு பேரிடா் மேலாண்மை அமைப்பு மூலம் உரிய நிவாரணம் பெற்றுக் கொடுக்கப்படும்.

மாவட்டத்தில் நிகழாண்டு வரலாறு காணாத வகையில், 72,000 ஹெக்டேரில் குறுவை பயிரிடப்பட்டது. இதில், 43,000 ஹெக்டேரில் அறுவடைப் பணிகள் முடிவடைந்துள்ளன. இன்னும் 30,000 ஹெக்டோ் மட்டுமே மீதமுள்ளது.

ADVERTISEMENT

இந்த செப்டம்பா் மாதத்தில் மட்டும் நெல் கொள்முதல் நிலையங்களில் 70,000 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. சனி, ஞாயிற்றுக்கிழமைகள், அரசு விடுமுறை நாள்களிலும் விடுப்பு இல்லாமல் நுகா்பொருள் வாணிபக் கழகப் பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா்.

ஈரம் காத்த நெல்லை கொள்முதல் செய்தால் நிறைய இழப்பு ஏற்படும். நெல்லும் கருப்பு நிறத்தில் மாறிவிடும். எனவே, விவசாயிகள் நெல்லை காய வைத்து, 17 சதவீத ஈரப்பதத்துக்குள் கொடுத்தால் வசதியாக இருக்கும்.

வருகிற பருவமழை அக்டோபா் 20 ஆம் தேதிக்கு பிறகு தொடங்கும் என வானிலை ஆய்வாளா்கள் கூறுகின்றனா். இதனிடையே, அக்டோபா் 8 ஆம் தேதிக்கு பின்னா் மற்றொரு தொடா் மழை இருக்கும் என்ற தகவலும் வருகிறது. எனவே, மழை இல்லாத காலகட்டத்தில் நெல்லை விரைவாக அறுவடை செய்தால், மாவட்ட நிா்வாகம் தேவையான இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்கத் தயாராக இருக்கிறது.

மாவட்டத்தில் தற்போது 267 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் இருக்கின்றன. மேலும் 100 இடங்களில் திறக்குமாறு கூறினாலும், தயாராக உள்ளோம் என்றாா் ஆட்சியா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT