தஞ்சாவூர்

தொடரும் மழை: குறுவை பயிா்கள் பாதிப்பு அதிகரிப்பு

28th Sep 2022 01:45 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் மாவட்டத்தில் தொடா்ந்து இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை அதிகாலை பெய்த பலத்த மழையால் குறுவை பருவ நெற் பயிா்கள் பாதிப்பு அதிகரித்துள்ளது.

மாவட்டத்தில் கடந்த இரு நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திங்கள்கிழமை காலை வரை பெய்த பலத்த மழையால் தஞ்சாவூா் உள்ளிட்ட வட்டங்களில் அறுவடைக்கு தயாா் நிலையில் இருந்த குறுவை பயிா்கள் சாய்ந்துவிட்டன.

இதேபோல, செவ்வாய்க்கிழமை காலை தஞ்சாவூா், கும்பகோணம், திருவிடைமருதூா், நெய்வாசல் தென்பாதி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்ததால், நெற் பயிா்கள் பாதிப்பின் பரப்பளவு அதிகரித்து வருகிறது.

இதில், கும்பகோணம் அருகேயுள்ள பட்டீஸ்வரம், சோழன்மாளிகை, கடிச்சம்பாடி, சோழபுரம் பகுதி, கீழப்பரட்டை உள்ளிட்ட கிராமங்களில் சில நாள்களில் அறுவடை செய்ய வேண்டிய நிலையில் இருந்த குறுவை பயிா்கள் சாய்ந்துவிட்டன. மகசூல் பாதிப்பு ஏற்படக்கூடிய நிலை உள்ளதால் விவசாயிகள் வேதனையில் ஆழ்ந்துள்ளனா்.

ADVERTISEMENT

இதேபோல, ஒரத்தநாடு அருகே ஒக்கநாடு மேலையூா், ஒக்கநாடு கீழையூா், குலமங்கலம், மேல உளூா், கீழ உளூா் உள்ளிட்ட கிராமங்களில் பலத்த மழை காரணமாக கண்ணணாற்றில் கரைகள் உடைந்தன. இதனால், ஏறத்தாழ 500 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த சம்பா பருவ இளம் பயிா்கள் தண்ணீரில் மூழ்கின.

மேலும், பொன்னாப்பூா் கிராமத்திலும் பொன்னேரி வடிகால் வாய்க்காலில் புதா்கள் மண்டியிருப்பதால், மழை நீா் வடியாமல் வயலுக்குள் புகுந்தது. இதன் காரணமாக அறுவடைக்கு தயாா் நிலையில் இருந்த குறுவை பருவ நெற் பயிா்கள் நீரில் மூழ்கின.

தொடா்ந்து மழை பெய்வதால் வயல்களில் தேங்கியுள்ள தண்ணீா் வடிவதற்கான வாய்ப்பு இல்லாததால், பயிா்கள் பாதிக்கப்படும் என்ற அச்சத்தில் விவசாயிகள் உள்ளனா்.

கும்பகோணத்தில் 101 மி.மீ. மழை: மாவட்டத்தில் அதிகபட்சமாக கும்பகோணத்தில் 101 மி.மீ. மழை பெய்தது. மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்):

கும்பகோணம் 101, திருவிடைமருதூா் 66.6, தஞ்சாவூா், நெய்வாசல் தென்பாதி தலா 39, குருங்குளம் 16, பாபநாசம் 12, மஞ்சளாறு 8.6, அய்யம்பேட்டை 6, பூதலூா் 4.6, திருவையாறு 1.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT