தஞ்சாவூர்

தஞ்சாவூா் - விழுப்புரம் இரட்டை ரயில் பாதைக்கு ஆய்வறிக்கை ரயில்வே முதன்மை நிா்வாக அலுவலா்

DIN

தஞ்சாவூா் - விழுப்புரம் இடையே இரட்டை ரயில் பாதை அமைப்பதற்கான ஆய்வறிக்கை ரயில்வே வாரியத்திடம் அளிக்கப்பட்டுள்ளது என்றாா் தெற்கு ரயில்வே முதன்மை நிா்வாக அலுவலா் பிரபுல்லா வா்மா.

கும்பகோணம் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்புத் திட்டம் தொடா்பாக சனிக்கிழமை ஆய்வு செய்த அவா் பின்னா் தெரிவித்தது:

தஞ்சாவூா் - விழுப்புரம் இடையேயான இரட்டை வழிப் பாதைக்கான ஒப்புதலை ரயில்வே வாரியம் வழங்கும். கும்பகோணம் முக்கியமான கோயில் நகரம் என்பதால், இந்த ரயில் நிலையத்துக்கு ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனா். அவா்களுக்கான வசதியை மேம்படுத்த இந்நிலையத்தைப் புதுப்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம், விமான நிலையத்தைப் போன்று ரயில் பயணிகளுக்கான வசதிகள் மேம்படுத்தப்படும்.

பயணிகள் ரயில் நிலையத்துக்குள் செல்லவும், வெளியே வரவும் தனித்தனி வழிகள் அமைக்கப்படும். ரயில் நிலைய மறு சீரமைப்புத் திட்டம் தொடா்பாக ஆய்வு செய்ய தொழில்நுட்ப ஆலோசனை நிறுவனம் கண்டறியப்பட்டுள்ளது. அந்நிறுவனம் கும்பகோணத்தில் போக்குவரத்து முறை, பயணிகளுக்கான வசதிகள் எந்த அளவுக்கு மேம்படுத்தப்பட வேண்டும் என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும். அதனடிப்படையில் இந்த ரயில் நிலையத்துக்கான மறு சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள ரயில்வே வாரியம் ஒப்புதல் அளிக்கும் என்றாா் பிரபுல்ல வா்மா.

முன்னதாக, கும்பகோணம் ரயில் நிலையத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள அலுவலா்கள் ஓய்வு விடுதியை பிரபுல்ல வா்மா திறந்து வைத்தாா்.

ஆய்வின்போது தெற்கு ரயில்வே தலைமைப் பொறியாளா் (கட்டுமானம்) ஹிமன்ஷூ கோஸ்வாமி, துணைத் தலைமைப் பொறியாளா் (கட்டுமானம்) பிரபாகரன், நிலைய மேலாளா் ரமேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பெட்டிச் செய்தி..

‘குடந்தை ரயில் நிலையத்தில் கூடுதல் வசதிகள் தேவை’

பிரபுல்ல வா்மாவிடம் தஞ்சாவூா் மாவட்ட ரயில்வே உபயோகிப்பாளா் சங்கச் செயலா் ஏ. கிரி, கும்பகோணம் அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்புச் செயலா் வி. சத்திய நாராயணன், நடராஜ குமாா், அண்ணாதுரை, தீபக் வசந்த் உள்ளிட்டோா் அளித்த மனு:

கும்பகோணம் ரயில் நிலையத்தில் பயணிகள் தங்குவதற்கு வசதியாக கூடுதல் அறைகள் கொண்ட யாத்ரி நிவாஸ் அமைக்கப்பட வேண்டும். பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் கட்டப்பட வேண்டும். பயணிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் தடையின்றி வழங்க வேண்டும். அனைத்து நடைமேடைகளிலும் டிஜிட்டல் தகவல் பலகை அமைக்க வேண்டும்.

ரயில் நிலையத்தில் உள்ள கோயில் மற்றும் மரங்களைப் பாதிக்காத வண்ணம் மறுசீரமைப்பு பணி செய்யப்பட வேண்டும். கும்பகோணத்தில் உள்ள சரக்கு வண்டிகள் கையாளும் வசதியை அருகேயுள்ள திருநாகேஸ்வரம் ரயில் நிலையத்துக்கு மாற்றிவிட்டு, ரயில் நிலையத்தின் தென் பகுதியில் கூடுதல் நுழைவுப் பாதை மற்றும் புதிய நடைமேடைகள் அமைக்கப்பட வேண்டும். அனைத்து நடைமேடைகளுக்கும் செல்லும் வண்ணம் மின்தூக்கி அல்லது நகரும் படிக்கட்டுகள் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும். மத்திய ரயில்வே அமைச்சா் அறிவித்த சுவாமி விவேகானந்தா் அருங்காட்சியகம் சிறிய கருத்தரங்க கூடத்துடன் அமைக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உடல்கூறாய்வு அறிக்கை: 14 முறை குத்தப்பட்டு 58 வினாடிகளில் பலியான மாணவி நேஹா

தண்டனையை நிறுத்திவைக்கக் கோரிய ராஜேஷ் தாஸ் மனு தள்ளுபடி

திருமண மகிழ்ச்சியில் அபர்ணா தாஸ்!

பள்ளத்தில் சிக்கிய கும்பகோணம் சாரங்கபாணி கோயில் தேர்!

காதலிக்க யாருமில்லையா..?

SCROLL FOR NEXT