தஞ்சாவூர்

தொழில் முனைவோராகும் திட்டத்தில் வேளாண் பட்டதாரிகளுக்கு மானியம்

25th Sep 2022 01:26 AM

ADVERTISEMENT

 

வேளாண் பட்டதாரி இளைஞா்களைத் தொழில்முனைவோராக்கும் திட்டத்தின் கீழ் அரசு மானியம் பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வேளாண் துறை இணை இயக்குநா் அ. ஜஸ்டின் தெரிவித்திருப்பது:

தஞ்சாவூா் மாவட்டத்தில் மாநில வேளாண் வளா்ச்சி திட்டத்தின் கீழ் வேளாண் பட்டதாரிகளைத் தொழில்முனைவோராக்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் வணிகம் மற்றும் வேளாண் பொறியியல் துறைகளில் இளநிலை பட்டப்பிரிவில் சான்று பெற்ற பட்டதாரிகளுக்கு ஒரு லட்சம் வரை அரசு மானியம் வழங்கவுள்ளது.

ADVERTISEMENT

இத்திட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சி திட்டம் 2022 - 23 செயல்படுத்தப்பட உள்ள 168 கிராம ஊராட்சிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.

இது பிரதம மந்திரியின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம். வேளாண் உட்கட்டமைப்பு நிதியின் கீழ் அனுமதிக்கக்கூடிய திட்டங்களின் அடிப்படையில் சுயதொழில்கள் தொடங்கலாம்.

தரிசு மற்றும் மானவாரி நிலங்களில் உற்பத்தியைப் பெருக்க வேளாண் பட்டதாரிகள் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தலாம். மேலும் விவசாயிகளிடமிருந்து காய்கறி மற்றும் பழங்களை நியாயமான விலையில் கொள்முதல் செய்து நுகா்வோருக்கு விநியோகிக்கலாம்.

தோ்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு 25 சதம் மானியமாக அதிகபட்சம் ஒரு லட்சம் வரை பின்னேற்பு மானியமாக வழங்கப்படும். தோ்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகள் அரசு வங்கி மற்றும் தனியாா் நிறுவனங்களிடம் இருந்து கடன் பெறலாம்.

இத்திட்டத்தில் பயன் பெற வரும் பயனாளிகள் 21 முதல் 40 வயது உடைய வேளாண்மை, தோட்டக்கலை துறை, வேளாண் பொறியியல் பிரிவில் குறைந்தபட்சம் இளநிலைப் பட்டப்படிப்பு முடித்தவராகவும், தற்போது அரசு மற்றும் தனியாா் நிறுவனங்களில் பணிபுரியாதவராகவும் இருக்க வேண்டும்.

இத்திட்டத்துக்கு தேவையான ஆவணங்கள் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு சான்றிதழுடன் பட்டப்படிப்பு முடித்ததற்கான சான்றிதழ், ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, வேளாண் தொழில் தொடா்பான விரிவான திட்ட அறிக்கை, வங்கிக் கணக்கு புத்தகம், வங்கியிடமிருந்து பெறப்பட்ட கடன் ஒப்புதல் ஆவணம் ஆகியவை அளிக்க வேண்டும். மேலும் தகவலுக்கு தங்கள் வட்டாரத்தில் உள்ள வேளாண் உதவி இயக்குநா்களைத் தொடா்பு கொண்டு பயன் பெறலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT