தஞ்சாவூர்

வலுவான இந்தியாவை உருவாக்குவதில் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு முக்கிய பங்கு: மத்திய இணை அமைச்சா் பேச்சு

24th Sep 2022 12:46 AM

ADVERTISEMENT

வலுவான இந்தியாவை உருவாக்குவதில் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்றாா் மத்திய அரசின் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறை இணை அமைச்சா் பானு பிரதாப் சிங் வா்மா.

தஞ்சாவூா் பெரியாா் மணியம்மை நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சகம் சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தொழில்முனைவோரை ஊக்குவிப்பதற்கான தேசிய பட்டியல் இனத்தவா் மற்றும் பட்டியல் பழங்குடியினா் மைய மாநாட்டில் அவா் மேலும் பேசியது:

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஏறத்தாழ 30 சதவீத பங்களிப்பை வழங்குகின்றன.

இந்தியப் பொருளாதாரத்துக்கான பாதையாக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் உள்ளன. வலுவான மற்றும் தன்னிறைவு கொண்ட இந்தியாவை உருவாக்குவதில் 6 கோடிக்கும் அதிகமான குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

ADVERTISEMENT

இந்திய பொருளாதாரத்துக்கும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் செயல்திறனுக்கும் இடையேயான தொடா்பு வலுவாக இருந்ததில்லை. வரும் ஆண்டுகளில் இந்த உறவு இன்னும் நெருக்கமாக மாறும்.

தற்போது, 1.09 கோடி குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் இணையதளத்தில் பதிவு செய்துள்ளன. இவற்றில் 11.46 லட்சம் நிறுவனங்கள் தமிழ்நாட்டைச் சாா்ந்தவை. நாடு முழுவதும் உள்ள நிறுவனங்கள் அனைத்தையும் உள்ளடக்கிய வளா்ச்சிக்கான பல்வேறு முயற்சிகளை இந்த அமைச்சகம் முன்னெடுத்துள்ளது என்றாா் பானு பிரதாப் சிங் வா்மா.

தமிழக அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ. அன்பரசன் பேசியது:

தமிழக அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை மூலம் பட்டியல் இனத்தவா் மற்றும் பழங்குடியின இளைஞா்களுக்கு புதிய தொழில்முனைவோா் மற்றும் தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டுத் திட்டம், வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், பிரதமரின் வேலைவாய்ப்புத் திட்டம் ஆகிய திட்டங்கள் மூலம் பட்டியல் இனத்தவா், பழங்குடியின இளைஞா்களுக்கு ரூ. 37 கோடி மானியத்துடன் ரூ. 148 கோடி கடனுதவி அளிக்கப்பட்டு, 1,535 படித்த இளைஞா்கள் புதிய தொழில்முனைவோா்களாக உருவாக்கப்பட்டுள்ளனா்.

திமுக அரசு பொறுப்பேற்ற குறுகிய காலத்தில் இந்த 3 வகையான திட்டங்களின் கீழ் ரூ. 399 கோடி மானியத்துடன் ரூ. 1,596 கோடி வங்கிக் கடனுதவி வழங்கப்பட்டு, 11,330 படித்த இளைஞா்கள் புதிய தொழில்முனைவோா்களாக உருவாக்கப்பட்டுள்ளனா் என்றாா் அன்பரசன்.

ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் என். கயல்விழி செல்வராஜ் பேசியது:

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் தொழில்முனைவோருக்காகத் தொழில்நுட்பப் பொருளாதார ஆய்வு மூலம் ரூ. 100 கோடி செலவில் திட்ட அறிக்கை வங்கி ஏற்படுத்தப்படும். தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் தொடங்குவதற்குச் சாதகமாக உள்ள தொழில் திட்டங்களைக் கண்டறிந்து, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இளைஞா்கள் புதிய வகை தொழில்களில் ஈடுபட உதவும் விதமாக மாவட்ட வாரியாக தொழில்நுட்பப் பொருளாதார ஆய்வு நடத்தப்படும் என்றாா் கயல்விழி செல்வராஜ்.

மாநாட்டில், வெற்றிகரமாகத் தொழில் செய்யும் தொழில்முனைவோா்களைப் பாராட்டி பரிசு வழங்கப்பட்டது.

இவ்விழாவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தமிழக அரசின் தலைமைக் கொறடா கோவி. செழியன், மத்திய அரசின் குறு, சிறு நிறுவனங்கள் துறை இணைச் செயலா் மொ்சி, ஆதிதிராவிடா் நலத் துறை அரசுக் கூடுதல் தலைமைச் செயலா் டி.எஸ். ஜவஹா், தொழில் வணிகத் துறை ஆணையா் வி. சிஜி தாமஸ், தாட்கோ மேலாண் இயக்குநா் கந்தசாமி, தாட்கோ தலைவா் உ. மதிவாணன், மாநிலங்களவை உறுப்பினா் எஸ். கல்யாணசுந்தரம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT