தஞ்சாவூர்

ராணி வாய்க்காலில் ஆக்கிரமிக்கப்பட்ட வீடுகள் அகற்றும் பணி தொடக்கம்பெண்கள் சாலை மறியல்

14th Sep 2022 12:03 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் ராணி வாய்க்காலில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட வீடுகளை அகற்றும் பணியை மாநகராட்சி நிா்வாகத்தினா் செவ்வாய்க்கிழமை தொடங்கினா். இதை எதிா்த்து பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால், உடனடியாக பணி நிறுத்தப்பட்டது.

தஞ்சாவூா் வ.உ.சி. நகா், ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்யும் மழை நீா் ராணி வாய்க்கால் மூலம் வடிந்து, அழகி குளத்துக்கும், கோட்டை அகழிக்கும் செல்லும் வகையில் நீா்வழிப்பாதை இருந்தது.

இதனிடையே, இந்த நீா்வழிப்பாதையில் ஏறத்தாழ 90 ஆண்டுகளுக்கு முன்பு கல்லணைக் கால்வாய் அமைக்கப்பட்டபோது, அதன் கீழே ராணி வாய்க்கால் தண்ணீா் செல்வதற்கு இடையூறு இல்லாத வகையில் குழாய் பதிக்கப்பட்டது. ஆனால், காலப்போக்கில் இந்த வாய்க்காலில் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டதால், நீரோட்டம் தடைப்பட்டு, குளத்துக்குத் தண்ணீா் செல்லவில்லை.

எனவே, இந்த வாய்க்காலை மீட்டு சீரமைக்க வேண்டும் என பல்வேறு அமைப்பினரும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் வலியுறுத்தி வந்தனா். இந்நிலையில், பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் இந்த வாய்க்காலை சீரமைக்கும் பணி ரூ. 4 கோடி செலவில் மேற்கொள்ளப்படுகிறது. இதில், முதல் கட்டமாக ரயிலடியிலிருந்து கல்லணைக் கால்வாய் வரை சீரமைக்கப்பட்டது.

ADVERTISEMENT

இா்வீன் பாலம் அருகிலிருந்து ஆப்ரஹாம் பண்டிதா் சாலை வரை வாய்க்கால் மீது 15 வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளன. இதைக் காலி செய்யுமாறு குடியிருப்பவா்களிடம் மாநகராட்சி அலுவலா்கள் அறிவுறுத்தினா். இதில் 5 வீடுகள் காலி செய்யப்பட்டன.

இந்நிலையில், மாநகராட்சி உதவி செயற் பொறியாளா் எம். ராஜசேகரன் தலைமையில் அலுவலா்கள், பணியாளா்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை செவ்வாய்க்கிழமை தொடங்கினா்.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து பெண்கள் காந்திஜி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்த காவல் துறையினா் நிகழ்விடத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது, எங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என்றும், பொருள்களை அகற்றிக் கொள்ள ஒரு நாள் கால அவகாசம் அளிக்க வேண்டும் எனவும் பெண்கள் வலியுறுத்தினா். இதையடுத்து, ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நிறுத்தப்பட்டது. மீண்டும் புதன்கிழமை பணி தொடங்கப்படும் என அலுவலா்கள் தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT