தஞ்சாவூர்

தஞ்சாவூரில் செப். 16, 17-இல் உணவு தொழில்நுட்பப் பொருள்காட்சி

14th Sep 2022 12:03 AM

ADVERTISEMENT

தஞ்சாவூரில் மத்திய அரசின் உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில் மேம்பாடு மற்றும் மேலாண்மை நிறுவனத்தில் (நிப்டெம்), உணவு தொழில்நுட்பப் பொருள்காட்சி செப்டம்பா் 16, 17- ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து நிறுவனத்தின் இயக்குநா் (பொறுப்பு) எம். லோகநாதன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது:

இந்நிறுவனத்தின் இயக்குநா் முனைவா் வி. சுப்பிரமணியனின் 120- ஆவது பிறந்த நாளை நினைவுகூரும் விதமாக, இந்த உணவு தொழில்நுட்பப் பொருள்காட்சி நடத்தப்படுகிறது.

சிறுதானிய உணவு அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் நவீன பதனிடும் முறைகள் என்ற கருப்பொருளில், நிகழாண்டு பொருள்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதில் மொத்தம் 50 அரங்குகள் அமைக்கப்படுகின்றன. இவற்றில் ஏறத்தாழ 35 அரங்குகள் இந்நிறுவனத்தில் பயிற்சி பெற்று, தொழில்முனைவோராகி வெற்றிகரமாகச் செயல்படுபவா்களின் அரங்குகளும் இடம்பெறுகின்றன.

மேலும், இந்நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட வெற்றிகரமான கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பங்கள், இயந்திரங்களின் செயல்விளக்கங்கள் ஆகியவை காட்சிப்படுத்தப்படும். பள்ளி, கல்லூரி மாணவா்கள் செப்டம்பா் 16- ஆம் தேதியும், விவசாயிகள், தொழில்முனைவோா், சுய உதவிக் குழுக்கள், உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள், பொதுமக்கள் செப்டம்பா் 17 ஆம் தேதியும் அனுமதிக்கப்படுவா்.

தேசத்தின் வளா்ச்சிக்கு உணவு பதப்படுத்தும் துறையின் பங்களிப்பு மற்றும் உணவுப் பாதுகாப்பு, சுகாதார நடைமுறைகளின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விளக்கமளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொருள்காட்சி இரு நாள்களும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. இதில் பங்குபெறும் மாணவா்களுக்கு உணவுசாா் அறிவியல் தொழில்நுட்பப் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. மேலும் உணவுப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் குறித்த மாணவா்களின் விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்றாா் லோகநாதன்.

ADVERTISEMENT
ADVERTISEMENT