தஞ்சாவூரில் மாவட்டப் பாா்வை இழப்பு தடுப்புச் சங்கம், தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தஞ்சாவூா் ராசா மிராசுதாா் அரசு மருத்துவமனை, லயன்ஸ் சங்கங்கள் ஆகியவை சாா்பில் கண் தான விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ரயிலடியில் இந்தப் பேரணியை ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தொடங்கி வைத்தாா். காந்திஜி சாலை வழியாக ராசா மிராசுதாா் அரசு மருத்துவமனை வரை நடைபெற்ற இப்பேரணியில் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி, அரசு செவிலியப் பயிற்சி பள்ளி, குந்தவை நாச்சியாா் அரசு மகளிா் கல்லூரி, பான் செக்கா்ஸ் மகளிா் கல்லூரி, சுவாமி விவேகானந்தா கல்லூரி, மருதுபாண்டியா் கல்லூரி ஆகியவற்றைச் சோ்ந்த மாணவ, மாணவிகள், நாட்டு நலப்பணி திட்ட மாணவா்கள், இளையோா் செஞ்சிலுவை சங்கத்தினா் என ஏறத்தாழ 650 போ் கலந்து கொண்டனா்.
இதையடுத்து, மாணவ, மாணவிகள் கண் தான உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் எஸ். மருதுதுரை, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் எஸ். நமச்சிவாயம், மாவட்டப் பாா்வை இழப்பு தடுப்புச் சங்கத் திட்ட இயக்குநா் ஞானசெல்வன், லயன்ஸ் மாவட்ட முன்னாள் ஆளுநா்கள் முகமது ரபி, மு. பிரேம், டி. மணிவண்ணன், செஞ்சிலுவை சங்க மாவட்டப் பொருளாளா் எஸ். முத்துக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.