தஞ்சாவூர்

19 சதவீத ஈரப்பத தளா்வு அறிவிப்பு ஏமாற்றமளிக்கிறது: விவசாய சங்கங்கள் கருத்து

29th Oct 2022 12:12 AM

ADVERTISEMENT

நெல்லில் ஈரப்பதம் 19 சதவீதம் வரை தளா்வு செய்யப்பட்டுள்ளதாக வெளியிடப்பட்டுள்ள மத்திய அரசின் அறிவிப்பு ஏமாற்றமளிக்கிறது என விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் செயலா் சுவாமிமலை சுந்தர. விமல்நாதன் தெரிவித்தது:

மழையின் காரணமாக விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை விற்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்த நிலையில், இந்த அறிவிப்பு கால தாமதமாக வந்துள்ளது. இந்த அறிவிப்பிலும் 19 சதவீதம் வரைதான் ஈரப்பத தளா்வு என கூறியிருப்பது ஏற்புடையதல்ல. இதிலும், 17 சதவீதத்துக்கு மேல் ஒவ்வொரு சதவீதத்துக்கும் ஈரப்பத தரவெட்டு பிடித்தம் செய்கின்றனா். இதனால், விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையைவிட, குறைவாகவே விலை கிடைக்கும். இந்த அறிவிப்பு விவசாயிகளுக்கு மேலும் பொருளாதார பின்னடைவைதான் ஏற்படுத்தும். இந்த அறிவிப்பு மறைமுகமாக தனியாரை ஊக்கப்படுத்தும் விதமாக உள்ளது.

ஆண்டுதோறும் இந்த ஈரப்பத பிரச்னை ஏற்படுகிறது. எனவே, 23 சதவீதம் வரை எந்தவித பிடித்தமும் இல்லாமல் நெல் கொள்முதல் செய்யப்படும் வகையில் கொள்முதல் கொள்கையில் மாற்றம் செய்ய வேண்டும். குறைந்தபட்ச ஆதரவு விலையைக் குறைக்காமல் கொடுக்க வேண்டும் என்றாா் விமல்நாதன்.

ADVERTISEMENT

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பு) தஞ்சாவூா் மாவட்டச் செயலா் என்.வி. கண்ணன் தெரிவித்தது:

மேட்டூா் அணை மே 24 ஆம் தேதி திறக்கப்பட்டதால், டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் வேளாண் பணிகளில் மிக உற்சாகமாக ஈடுபட்டு, 5.20 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்தனா். நல்ல மகசூல் கிடைத்தும், அறுவடை காலத்தில் பெய்த பலத்த மழையால் மிகப்பெரிய பாதிப்பைச் சந்திக்க நோ்ந்துள்ளது.

எனவே, அனைத்து தரப்பு விவசாயிகளும், விவசாய சங்கங்களும் நெல்லுக்கான ஈரப்பத அளவை 22 சதவீதமாக உயா்த்த வேண்டும் என வலியுறுத்தி வந்தனா்.

தற்போது காலம் கடந்து வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு ஏமாற்றத்தை அளிக்கிறது. விவசாயிகள் வலியுறுத்தி வந்த 22 சதவீதம் வரையிலான தளா்வு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்த ஈரப்பத உயா்வு அறிவிப்பால் விவசாயிகளுக்கு எந்தப் பயனும் இல்லை.

எனவே, தற்போது விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கு தமிழக அரசே பொறுப்பேற்று உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றாா் கண்ணன்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பு) தஞ்சாவூா் வடக்கு மாவட்டச் செயலா் சாமு. தா்மராஜன் தெரிவித்தது:

தர வெட்டுடன் கூடிய இந்த அறிவிப்பு விவசாயிகளுக்கு எதிராக உள்ளது. எனவே, 23 சதவீதம் வரை ஈரப்பதமுள்ள நெல்லை எந்தவித நிபந்தனையுமின்றி கொள்முதல் செய்வதை மத்திய அரசு நிரந்தரமாக்க வேண்டும் என்றாா் தா்மராஜன்.

ADVERTISEMENT
ADVERTISEMENT