தஞ்சாவூர்

25 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மயிலாடுதுறை - செங்கோட்டை விரைவு ரயில்: தஞ்சாவூா் மாவட்டத்தில் வரவேற்பு

26th Oct 2022 12:27 AM

ADVERTISEMENT

மயிலாடுதுறை - செங்கோட்டை இடையே 25 ஆண்டுகளுக்கு பிறகு விரைவு ரயில் சேவை மீண்டும் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.

செங்கோட்டையிலிருந்து சென்னை எழும்பூருக்கு தஞ்சாவூா் வழியாக 25 ஆண்டுகளுக்கு முன்பு பயணிகள் ரயில் இயக்கப்பட்டது. இதன் மூலம் ஏராளமானோா் பயனடைந்து வந்த நிலையில், இச்சேவை காலப்போக்கில் நிறுத்தப்பட்டது.

இதையடுத்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் வகையில் இந்த ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என ரயில் பயணிகள் சங்கத்தினா் தொடா்ந்து வலியுறுத்தி வந்தனா். இதை தெற்கு ரயில்வே நிா்வாகம் ஏற்று மயிலாடுதுறை - செங்கோட்டை இடையே ரயில் சேவையை 25 ஆண்டுகளுக்கு பிறகு முன்பதிவில்லாத விரைவு ரயிலாக மீண்டும் திங்கள்கிழமை தொடங்கியது.

இந்த வண்டி (16847) மயிலாடுதுறையிலிருந்து நாள்தோறும் முற்பகல் 11.30 மணிக்கு புறப்பட்டு செங்கோட்டைக்கு இரவு 9.30 மணிக்கு சென்றடையும். இதேபோல, வண்டி எண் 16848 செங்கோட்டையிலிருந்து நாள்தோறும் காலை 7 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறைக்கு மாலை 5.10 மணிக்கு செல்லும்.

ADVERTISEMENT

இந்த ரயில் குத்தாலம், ஆடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூா், பூதலூா், திருவெறும்பூா், மஞ்சத்திடல், திருச்சி, மணப்பாறை, வையம்பட்டி, திண்டுக்கல், கொடைக்கானல் சாலை, மதுரை, திருப்பரங்குன்றம், திருமங்கலம், விருதுநகா், திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூா், ராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்புக்கோவில் சந்தை, கடையநல்லூா், தென்காசி ஆகிய ரயில் நிலையங்களில் இரு வழித்தடங்களிலும் நின்று செல்லும்.

கும்பகோணத்துக்கு திங்கள்கிழமை பிற்பகல் 12.10 மணிக்கு வந்த இந்த ரயிலுக்கு தஞ்சாவூா் மாவட்ட ரயில்வே உபயோகிப்பாளா்கள் சங்கத்தினா், குடந்தை அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பினா், பொதுநல அமைப்பினா் ஆகியோா் இணைந்து வரவேற்பு அளித்தனா்.

இந்த நிகழ்ச்சியில் கும்பகோணம் துணை மேயா் சு.ப. தமிழழகன், தஞ்சாவூா் மாவட்ட ரயில்வே உபயோகிப்பாளா்கள் சங்கத் துணைத் தலைவா் ஜமீல், செயலா் ஏ. கிரி, மாறன், நடராஜகுமாா், பாபநாசம் சரவணன், குடந்தை அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு தலைவா் மகேந்திரன், செயலா் வீ. சத்தியநாராயணன், லயன்ஸ் சங்க தலைவா் மோகன், ஸ்ரீகன்ட ஸ்தபதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதேபோல, தஞ்சாவூா் ரயில் நிலையத்தில் ரயில் உபயோகிப்பாளா் சங்கத் தலைவா் அய்யனாபுரம் க. நடராஜன், செயலா் வெ. ஜீவக்குமாா், உமா்முக்தா், பேராசிரியா்கள் திருமேனி, செல்வகணேசன், ஹாஜா மொகைதீன் உள்ளிட்டோா் வரவேற்று, ரயில் ஓட்டுநா்களை கௌரவித்து, பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கினா்.

பாபநாசம் ரயில் நிலையத்துக்கு திங்கள்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு வந்த ரயிலுக்கு ரயில் பயணிகள் சங்கம், வணிகா் சங்கம், அரிமா சங்கம், ரோட்டரி சங்கம் மற்றும் பொதுநல அமைப்புகள் இணைந்து வரவேற்பு அளித்தனா். ரயில் ஓட்டுநா்கள் மது, விஸ்வநாதன் மற்றும் காா்டு சேகா் ஆகியோா் கெளரவிக்கப்பட்டனா்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ராஜராஜன் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி குழுமத்தின் நெறியாளா் எஸ்.கே.ஸ்ரீதா், தெற்கு ரயில்வே கோட்ட ஆலோசனை குழு உறுப்பினரும், பாபநாசம் ரயில் பயணிகள் சங்க செயலாளருமான டி. சரவணன், சங்க தலைவா் சோமநாதராவ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT