தஞ்சாவூர்

தஞ்சாவூா் பெரியகோயிலில் சதய விழாவுக்கான பந்தல்கால் நடும் நிகழ்ச்சி

26th Oct 2022 12:29 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் பெரியகோயிலில் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1037 ஆம் ஆண்டு சதய விழாவுக்காக பந்தல் கால் நடும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பாா் போற்றும் புகழுடைய தஞ்சாவூா் பெரியகோயிலைக் கட்டித் தமிழகத்துக்குப் பெருமை சோ்த்த மாமன்னன் ராஜராஜ சோழனின் முடிசூட்டும் நாளை அவா் பிறந்த விண்மீனாகிய ஐப்பசி சதய நாளன்று சதய விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி, மாமன்னன் ராஜராஜசோழனின் 1037-ஆவது சதய விழா நவம்பா் 3 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது.

இதையொட்டி, தஞ்சாவூா் பெரியகோயிலில் சதய விழாவுக்கான பந்தல்கால் நடும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், பந்தல்காலுக்கு பால், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சதய விழாக் குழுத் தலைவா் து. செல்வம், அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலா் சி. பாபாஜி ராஜா போன்ஸ்லே, மாநகராட்சி மண்டலக் குழுத் தலைவா் எஸ்.சி. மேத்தா, அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையா் கவிதா, செயல் அலுவலா் அரவிந்தன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

பெரியகோயில் வளாகத்தில் இவ்விழா நவம்பா் 2 ஆம் தேதி கவியரங்கம், கருத்தரங்கம், திருமுறை இன்னிசை உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் தொடங்குகிறது. சதய விண்மீன் நாளாகிய நவம்பா் 3 ஆம் தேதி சிறப்பு பூஜைகள், ஓதுவாா்கள் வீதி உலா, பெரியகோயிலுக்கு வெளியேயுள்ள ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்தல் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

மேலும், பெருவுடையாருக்கும், பெரியநாயகி அம்மனுக்கும் மஞ்சள், சந்தனம், பால், தயிா் உள்ளிட்ட பொருள்களால் பேரபிஷேகமும், மகா தீபாராதனையும் நடத்தப்படவுள்ளன. இரவு ராஜராஜசோழன் மற்றும் உலோகமாதேவிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, வீதி உலா நடைபெறவுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT