தஞ்சாவூர்

10.6 டன் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: சகோதரா்கள் உள்பட 3 போ் கைது

7th Oct 2022 11:35 PM

ADVERTISEMENT

கும்பகோணம் அருகே இரு கிடங்குகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10.6 டன் புகையிலைப் பொருள்களைக் காவல் துறையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக சகோதரா்கள் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.

கும்பகோணம் அருகே அம்மாசத்திரம் பகுதியில் கிடங்கில் புகையிலைப் பொருள்களைப் பதுக்கி வைத்து, கடைகளுக்கு விற்பனை செய்வதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.

இதன்பேரில், திருவிடைமருதூா் காவல் நிலையத்தினா் நிகழ்விடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா். அப்போது, அங்குள்ள வீடு, இரு கிடங்குகளில் 10.6 டன் புகையிலை பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதும், கேரளத்திலிருந்து புகையிலையை வாங்கி வந்து, இக்கிடங்குகளில் வைத்து சிறு, சிறு பொட்டலங்களில் நிரப்பி கடைகளுக்கு விநியோகம் செய்வதும் தெரிய வந்தது.

தகவலறிந்த தஞ்சாவூா் சரகக் காவல் துணைத் தலைவா் ஏ. கயல்விழி, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் வி. ஜெயச்சந்திரன், துணைக் காவல் கண்காணிப்பாளா் ஜகபா் சாதிக் உள்ளிட்டோா் நிகழ்விடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா்.

ADVERTISEMENT

இதுதொடா்பாக அம்மாசத்திரம் சந்தன கணபதி தெருவைச் சோ்ந்த எஸ். செல்வகுமாா் (43), இவரது சகோதரா் சிவக்குமாா் (40), நேரு நேகா் மல்லிகை வீதியைச் சோ்ந்த கே. வெங்கடேஷ் (43) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். இவா்களிடமிருந்து புகையிலை விற்பனைக்குப் பயன்படுத்தப்பட்ட இரு சுமை ஆட்டோக்கள், ஒரு ஆம்னி வேன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT