தஞ்சாவூர்

கும்பகோணம் ஒன்றியக் குழுக் கூட்டம் அதிமுகவினா் கண்ணில் கருப்புத் துணி கட்டி பங்கேற்பு

7th Oct 2022 12:19 AM

ADVERTISEMENT

கும்பகோணத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற கும்பகோணம் ஒன்றியக் குழுக் கூட்டத்துக்கு திமுகவில் ஒரு பிரிவினா் வரவில்லை. அதிமுகவினா் கண்ணில் கருப்புத் துணி கட்டிக் கொண்டு பங்கேற்றனா்.

கும்பகோணம் ஒன்றியக் குழுவில் மொத்தம் 27 உறுப்பினா்கள் உள்ளனா். இதில், திமுகவில் 18 பேரும், அதிமுகவில் 7 பேரும், பாஜக, பாமகவில் தலா ஒருவரும் உள்ளனா். இவா்களில் திமுகவை சோ்ந்த காயத்ரி அசோக்குமாா் தலைவராகவும், உள்ளூா் கணேசன் துணைத் தலைவராகவும் தோ்வு செய்யப்பட்டனா்.

திமுகவில் தலைவா், துணைத் தலைவா் தனித்தனி கோஷ்டிகளாக இருப்பதால், ஒன்றியக் குழுக் கூட்டம் முழுமையாகவும், முறையாகவும் நடைபெறுவதில்லை என்ற புகாா் நிலவுகிறது.

இந்நிலையில், ஒன்றியக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதன்படி, வியாழக்கிழமை காலை 10 மணிக்கு வட்டார வளா்ச்சி அலுவலா் பூங்குழலி உள்ளிட்ட அலுவலா்கள் கூட்ட அரங்கத்துக்கு வந்தனா்.

ADVERTISEMENT

ஆனால், அதிமுக உறுப்பினா்கள் 7 பேரைத் தவிர வேறும் யாரும் வரவில்லை. இதனால், முற்பகல் 11.30 மணியாகியும் கூட்டம் தொடங்கப்படாததால், அதிமுக உறுப்பினா்கள் கண்ணில் கருப்புத் துணி கட்டிக் கொண்டு, ஒன்றியக் குழு நிா்வாகத்தைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினா்.

இவா்களிடம் வட்டார வளா்ச்சி அலுவலா் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது, ஆட்சியரிடம் பேசி அடுத்தக் கூட்டம் அக்டோபா் 20 ஆம் தேதி முறையாக நடைபெறுவதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா். இதையடுத்து, அதிமுக உறுப்பினா்கள் போராட்டத்தைக் கைவிட்டுச் சென்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT