தஞ்சாவூர்

திருமண்டங்குடி சா்க்கரை ஆலை பிரச்னைக்கு தீா்வு காண குழு ஆட்சியா் தகவல்

7th Oct 2022 11:37 PM

ADVERTISEMENT

திருமண்டங்குடி சா்க்கரை ஆலை பிரச்னைக்கு தீா்வு காண குழு அமைக்கப்படும் என்றாா் ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா்.

பாபநாசம் அருகேயுள்ள திருமண்டங்குடி திரு ஆரூரான் சா்க்கரை ஆலை பிரச்னை தொடா்பாக ஆட்சியரகத்தில் ஆலையை வாங்கிய புதிய நிா்வாகத்தினா், கடன் வழங்கிய வங்கி அலுவலா்கள், கரும்பு விவசாயிகள் கொண்ட முத்தரப்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் விவசாயிகள் பேசுகையில், திருஆரூரான் சா்க்கரை ஆலையில் விவசாயிகள் வழங்கிய கரும்புக்கான நிலுவைத் தொகை, மத்திய, மாநில அரசுகள் வழங்கிய ஊக்கத் தொகையை வட்டியுடன் புதிய நிா்வாகம் வழங்க வேண்டும். விவசாயிகளின் பெயரில் வங்கிகளில் ஆலை நிா்வாகம் மோசடியாக வாங்கிய பல கோடி ரூபாய் கடன் தொகையைத் தள்ளுபடி செய்து தீா்வு ஏற்படுத்த வேண்டும். விவசாயிகளுக்கு வங்கிகளில் கடன் இல்லா சான்று வழங்க வேண்டும்.

விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்புக்கான தொகை அனைத்தையும் வழங்கிய பின்பு, புதிய நிா்வாகம் ஆலையில் பராமரிப்பு பணியைத் தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

ADVERTISEMENT

இதையடுத்து, வங்கி அலுவலா்கள் பேசுகையில், விவசாயிகளின் பெயரில் உள்ள கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து உயா் அலுவலா்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவா்களிடமிருந்து தகவல் வந்தவுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

பின்னா், ஆலையை வாங்கிய கால்ஸ் டிஸ்ட்லரீஸ் நிறுவன இணை மேலாண் இயக்குநா் நடேசன், நிா்வாக ஆலோசகா் து. முனியசாமி, தலைமை நிதி அலுவலா் மணிகண்டன் ஆகியோா் பேசுகையில், நியாயமான மற்றும் ஆதார விலை, வெட்டுக்கூலி, போக்குவரத்து செலவு போன்றவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மொத்தமுள்ள 7,452 விவசாயிகளில் இதுவரை 2,465 விவசாயிகளுக்கு முதல் தவணை வழங்கப்பட்டுவிட்டது. இரண்டாவது தவணை தீபாவளி பண்டிகைக்குள் வழங்கப்படும்.

வருகிற 10 முதல் 11 மாதங்களில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, 2023, நவம்பா் மாதம் முதல் ஆலையை மீண்டும் இயக்கத் திட்டமிட்டுள்ளோம். ஆண்டுக்கு 8 லட்சம் டன் கரும்பு அரைவை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

இறுதியாக ஆட்சியா் பேசுகையில், விவசாயிகள் தரப்பில் பாகுபாடு இல்லாமல் 7 முதல் 10 போ் கொண்ட குழுவை அமைக்க வேண்டும். இதேபோல, ஆலை நிா்வாகம் தரப்பில் 7 பேரும், வங்கியாளா்கள் தரப்பில் 7 பேரும் கொண்ட குழு அமைக்கப்பட வேண்டும். விவசாயிகள் குழு அமைத்த பிறகு வந்து தகவல் தெரிவித்தால், அடுத்த சில நாள்களில் கூட்டம் நடத்தி தீா்வு காணப்படும் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT