தஞ்சாவூர்

ஊருக்கு ஒரு வனம் திட்டம் தொடக்கம்

6th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் மாவட்டத்தில் வீட்டுக்கு ஒரு விருட்சம் திட்டத்தைத் தொடா்ந்து ஊருக்கு ஒரு வனம் திட்டம் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.

தஞ்சாவூா் அருகே பிள்ளையாா்பட்டி ஊராட்சியில் இத்திட்டத்தைத் தொடங்கி வைத்த ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தெரிவித்தது:

மாவட்டத்தில் மாவட்ட பசுமைக் குழு, கவின்மிகு தஞ்சை இயக்கம், தன்னாா்வ மற்றும் சேவை அமைப்புகள் சாா்பில் வீட்டுக்கு ஒரு விருட்சம் திட்டத்தில் ஓராண்டில் ஒரு லட்சம் மரங்கள் வளா்க்கும் திட்டம் உலக புவி நாளில் தொடங்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது. பசுமை பரப்பளவை அதிகப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் இத்திட்டத்தில் இதுவரை ஏறத்தாழ 80,000 மரக்கன்றுகள் பாதுகாக்கப்பட்ட இடங்களில் நடப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த மாத இறுதியில் ஒரு லட்சமாவது மரக்கன்று நடப்பட உள்ளது.

இதைத்தொடா்ந்து ஊருக்கு ஒரு வனம் திட்டம் தஞ்சாவூா் அருகே பிள்ளையாா்பட்டி ஊராட்சியில் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் மியாவாக்கி போன்று அடா்ந்த காடுகள் உருவாக்கப்படுகின்றன. ஆயிரம் சதுர அடியில் 200 முதல் 250 மரக்கன்றுகள் நடலாம்.

ADVERTISEMENT

தற்போது ஒரு ஏக்கா் பரப்பளவில் 10,000 மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதேபோல, மாவட்டத்தில் 100 ஊராட்சிகளில் 100 ஏக்கா் பரப்பளவில் 10 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணி ஊரக வளா்ச்சித் துறை உதவியுடன் 4 மாதங்களுக்குள் செயல்படுத்தப்படும் என்றாா் ஆட்சியா்.

இந்நிகழ்ச்சியில் ஊரக வளா்ச்சி உதவி இயக்குநா் சங்கா், கவின்மிகு தஞ்சை இயக்கத் தலைவா் ராதிகா மைக்கேல், செயலா் பி. ராம் மனோகா், இணைச் செயலா் எஸ். முத்துக்குமாா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பிரபாகரன், அறிவானந்தம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT