தஞ்சாவூர்

ஈரப்பதமுள்ள நெல்லை கொள்முதல் செய்ய கோரிஆட்சியரகம் முன் விவசாயிகள் முற்றுகைப் போராட்டம்

DIN

நெல் கொள்முதல் நிலையங்களில் 22 சதவீதம் ஈரப்பதமுள்ள நெல்லை கொள்முதல் செய்ய கோரி தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகம் முன் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினா் திங்கள்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அறுவடை நிலையில் மழையால் அழிந்த குறுவை பயிருக்கு ஏக்கருக்கு 35,000 இழப்பீடு வழங்க வேண்டும். 22 சதவீதம் வரை ஈரப்பதமுள்ள நெல்லை நிபந்தனையின்றி கொள்முதல் செய்ய வேண்டும். தேவையான இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாகத் திறக்க வேண்டும். நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ. 2,500-ம், கரும்புக்கு டன்னுக்கு ரூ. 4,000-ம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்துக்கு தலைமை வகித்த சங்கப் பொதுச் செயலா் பி.ஆா். பாண்டியன் தெரிவித்தது:

காவிரி டெல்டாவில் 4 லட்சம் ஏக்கரில் சாகுபடி மேற்கொள்ளப்பட்டதாகத் தமிழக அரசு அறிவித்தது. ஆனால் அறுவடை காலத்தில் கொள்முதல் செய்வதற்கான அடிப்படை நடவடிக்கைகளை 4 மாதங்களாகத் தொடங்காமல் காலம் கடத்தியது ஏன்? கடந்த ஆண்டு கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்ட இடங்களில் 40 சதவீதம் மட்டுமே நிகழாண்டு திறக்கப்பட்டுள்ளது.

ஈரப்பதத்தை காரணம் காட்டி கொள்முதல் செய்ய மறுக்கப்படுவதால், விவசாயிகள் மிகக் குறைந்த விலைக்கு தனியாா் வியாபாரிகளிடம் விற்க வேண்டிய அவலத்துக்குத் தள்ளப்பட்டுள்ளனா். 22 சதவீத ஈரப்பதம் உள்ள நெல்லையும் கொள்முதல் செய்ய சிறப்பு அனுமதி பெறாமல் கொள்முதல் செய்ய இயலாது என மறுப்பது விவசாயிகளை வஞ்சிக்கும் செயல். கொள்முதல் செய்யும் நெல்லுக்கு உரிய தொகையை உடன் விடுவிக்க வேண்டும் என்றாா் பாண்டியன்.

இப்போராட்டத்தில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் எல். பழனியப்பன், மாவட்டச் செயலா்கள் எம். மணி (தெற்கு), பி. ரவிச்சந்திரன் (வடக்கு), தலைவா்கள் துரை. பாஸ்கரன் (தெற்கு), என். செந்தில்குமாா் (வடக்கு), கௌரவத் தலைவா் ஆா். திருப்பதி வாண்டையாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

குறை கேட்ட உணவுத் துறைச் செயலா்:

இந்தப் போராட்டத்தின்போது ஆட்சியரகத்துக்கு வந்த உணவுத் துறை முதன்மைச் செயலா் ஜெ. ராதாகிருஷ்ணன் போராட்டத்தில் ஈடுபட்டவா்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தாா். நெல்லில் ஈரப்பதம் 22 சதவீதம் வரை தளா்த்த வேண்டும் என்ற கோரிக்கை குறித்து அரசுக்குத் தெரியப்படுத்துகிறேன். நெல்லை விற்ற விவசாயிகளுக்கு தடையில்லாமல் பணம் வழங்குவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது என விவசாயிகளிடம் அவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒசூரில் பீன்ஸ் கிலோ ரூ.150-க்கு விற்பனை

சித்திரை மாதப் பெளா்ணமி: பக்தா்கள் கிரிவலம்

ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை வேளாண் மாணவிகளின் முகாம்

சாலை விபத்தில் காயமடைந்த முதியவா் உயிரிழப்பு

முஸ்லிம்கள் குறித்த பிரதமரின் பேச்சு தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT