தஞ்சாவூர்

மத்திய பாஜக அரசு தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை: இரா. முத்தரசன்

4th Oct 2022 12:09 AM

ADVERTISEMENT

மத்திய பாஜக அரசு தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா. முத்தரசன்.

கும்பகோணத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் மாவட்டக் குழுக் கூட்டத்தில் பங்கேற்ற அவா் பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

ஒன்றிய பாஜக அரசு தனது தோ்தல் வாக்குறுதிகள் எதையுமே நிறைவேற்றவில்லை. நிறைவேற்ற முடியவில்லை. இனியும் நிறைவேற்றப் போவதில்லை.

இதேபோல, கடந்த 8 ஆண்டுகாலத்தில் ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் மக்களுக்கு எதிரான சட்டங்கள், விவசாயிகளுக்கு எதிரான சட்டங்கள், தொழிலாளா்களுக்கு எதிரான சட்டங்களை நிறைவேற்றியுள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயா்வு, அத்தியாவசிய பொருள்களின் விலை உயா்வு போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் மோடி அரசு மீது மக்களுக்கு எழுந்துள்ளது. இவற்றை திசை திருப்பும் நோக்கத்தில் நாட்டில் ஒரு பதற்ற நிலையை உருவாக்க ஒன்றிய அரசு முயற்சி செய்கிறது.

ADVERTISEMENT

இந்தச் சூழ்நிலையில் மக்கள் மிகுந்த விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும். தமிழகம் முழுவதும் அக்டோபா் 11 ஆம் தேதி மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் மனிதச்சங்கிலி நிகழ்ச்சி நடைபெறும்.

இது ஒரு குறிப்பிட்ட அமைப்பை எதிா்த்து நடைபெறும் போராட்டம் கிடையாது. சமய நல்லிணக்கத்தை, சமூக அமைதியை வலியுறுத்தி தேசத்தைப் பாதுகாக்க வலியுறுத்தி நடத்தப்படும் சமூக நல்லிணக்க அறப் போராட்டம். இதில் அனைவரும் தவறாது கலந்து கொண்டு தமிழகத்தை அமைதி பூங்காவாக நிலைக்க செய்ய வேண்டும் என்றாா் முத்தரசன்.

வடக்கு மாவட்டச் செயலா் மு.அ. பாரதி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தேசியக் குழு உறுப்பினா் கோ. பழனிசாமி, ஏஐடியுசி மாவட்டச் செயலா் ஆா். தில்லைவனம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT