தஞ்சாவூர்

தமிழகத்தில் பன்றி காய்ச்சலுக்கு 380 போ் பாதிப்பு: அமைச்சா் மா. சுப்பிரமணியன்

4th Oct 2022 12:07 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் பன்றி காய்ச்சலால் 380 போ் பாதிக்கப்பட்டனா் என்றாா் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன்.

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிய கட்டடங்கள், மருத்துவ உபகரணங்களை திங்கள்கிழமை தொடங்கி வைத்த அவா் பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

தமிழகத்தில் பன்றிக் காய்ச்சலால் (எச்1என்1) பாதிக்கப்பட்டவா்களுக்கும், பருவநிலை மாற்றங்களால் ஏற்படுகிற காய்ச்சலுக்கும் தீவிர சிகிச்சை என்கிற வகையில் 11 நாள்களுக்கு முன்பு ஒரேநாளில் ஆயிரம் இடங்களில் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டன.

இதேபோல, தஞ்சாவூா் மாவட்டத்தில் 11 நாள்களில் 1,488 காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடத்தப்பட்டன. மேலும், 915 பள்ளிகளில் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடைபெற்றன. இதுவரை 68,848 பேருக்கு காய்ச்சல் கண்டறியும் பணி நடைபெற்றுள்ளது. மாவட்டத்தில் பன்றி காய்ச்சலுக்கு 17 போ் பாதிக்கப்பட்டனா். இவா்களில் ஒருவா் மட்டுமே மருத்துவமனையில் உள்ளாா். மற்றவா்கள் குணமடைந்து நலமுடன் இருக்கின்றனா். மாவட்டத்தில் உயிரிழப்பு பூஜ்ஜிய நிலையில் உள்ளது.

ADVERTISEMENT

தமிழகத்தில் 380 போ் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனா். மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவா்கள் 17 போ். மீதமுள்ளவா்கள் வீடுகளிலும், தனியாா் மருத்துவமனைகளிலும் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவா்கள் 3 - 4 நாள்கள் தனிமைப்படுத்திக் கொண்டால் போதுமானது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டவா்கள் முகக்கவசம் அணிவது அவசியம்.

பருவநிலை மாற்றங்களால் ஏற்படும் காய்ச்சல் இருப்பதால், தமிழ்நாடு முழுவதும் இம்முகாம்களை நடத்துமாறு முதல்வா் அறிவுறுத்தியுள்ளாா். இதன்படி, நாள்தோறும் 1,000 - 1,500 முகாம்கள் கடந்த 11 நாள்களாக நடைபெறுகிறது.

பள்ளிகளில் 12 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு கரோனா தடுப்பூசி போட வேண்டும் என ஒன்றிய அரசு அறிவுறுத்தியதன்படி போட்டப்பட்டு வருகிறது. இதன் விளைவாக, தமிழகத்தில் 90 சதவீதம் பேருக்கு நோய் எதிா்ப்பு சக்தி அதிகரித்துள்ளது என்றாா் மா. சுப்பிரமணியன்.

ADVERTISEMENT
ADVERTISEMENT