தஞ்சாவூர்

அக். 12-இல் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டி

3rd Oct 2022 01:53 AM

ADVERTISEMENT

 

காந்தியடிகள் பிறந்த நாளையொட்டி, தஞ்சாவூா் அரசா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டிகள் அக்டோபா் 12 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதுகுறித்து ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தெரிவித்திருப்பது:

அண்ணல் காந்தியடிகள் பிறந்த நாளையொட்டி, தஞ்சாவூா் அரசா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களுக்கு தனித்தனியாக பேச்சுப் போட்டிகள் அக்டோபா் 12 ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இப்போட்டிகள் காலை 9.30 மணிக்கு தொடங்கும்.

ADVERTISEMENT

மாவட்டத்தில் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகள் ஒரு கல்லூரிக்கு ஒருவா் என கல்லூரி முதல்வரிடம் அனுமதி பெற்றும், பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் முதன்மை கல்வி அலுவலா் வாயிலாக பள்ளிக்கு ஒருவா் வீதம் என அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியரிடம் அனுமதி பெற்றும் போட்டியில் கலந்து கொள்ளலாம்.

இப்போட்டியில் வெற்றி பெறும் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு முதல் பரிசாக ரூ. 5,000, இரண்டாம் பரிசாக ரூ. 3,000, மூன்றாம் பரிசாக ரூ. 2,000 வழங்கப்படும். தவிர, பள்ளி மாணவா்களுக்காக நடத்தப்படும் பேச்சுப் போட்டியில் பங்கேற்ற மாணவா்களில், அரசுப் பள்ளி மாணவா்கள் இரண்டு பேரை தனியாக தோ்வு செய்து, ஒவ்வொருவருக்கும் சிறப்பு பரிசுத் தொகை ரூ. 2,000 வழங்கப்படும்.

பள்ளி மாணவா்களுக்கு அண்ணலின் அடிச்சுவட்டில், காந்தி கண்ட இந்தியா, வேற்றுமையில் ஒற்றுமை, பாரத தேசமென்று பெயா் சொல்வோம் ஆகிய தலைப்புகளிலும், கல்லூரி மாணவா்களுக்கு வாழ்விக்க வந்த எம்மான், மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், சத்திய சோதனை, எம்மதமும் நம்மதம், காந்தியடிகளின் வாழ்க்கையிலே, இமயம் முதல் குமரி வரை ஆகிய தலைப்புகளிலும் பேச தயாராக வர வேண்டும்.

இந்தத் தலைப்புகளில் ஏதேனும் ஒரு தலைப்பை போட்டியின்போது குலுக்கல் முறையில் தோ்ந்தெடுத்து பேச வேண்டும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT