தஞ்சாவூர்

கும்பகோணம் ரயில் நிலையத்தில்கோட்ட மேலாளா் ஆய்வு

1st Oct 2022 04:51 AM

ADVERTISEMENT

கும்பகோணம் ரயில் நிலைய மேம்பாட்டுக்காக ஆய்வு செய்யப்படுகிறது என்றாா் திருச்சி ரயில்வே கோட்ட மேலாளா் மணீஷ் அகா்வால்.

கும்பகோணம் ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

ரயில்வே வாரியம் அறிவித்துள்ள ரயில்வே மேம்பாட்டுப் பணிகளை கும்பகோணம் ரயில் நிலையத்தில் மேற்கொள்வது குறித்த ஆய்வு செய்யப்படுகிறது. இப்பகுதியில் உள்ள மக்கள் பிரதிநிதிகளுடன் இத்திட்டம் குறித்து ஆலோசிக்கப்படுகிறது. இதையடுத்து, இங்கு மேற்கொள்ள வேண்டிய வளா்ச்சி திட்டப் பணிகள், தேவையான வசதிகள் போன்றவற்றை ஆய்வு செய்து ரயில்வே வாரியத்துக்கு பரிந்துரை செய்யப்படும்.

கும்பகோணம் ரயில் நிலையம் தமிழகத்திலேயே முக்கியமான ரயில் நிலையமாக உள்ளது. இதை மேம்பாடு செய்வது அவசியமான ஒன்று. ரயில்வே வாரியம் கூறியுள்ள வழிகாட்டுதலின்படி இந்த ரயில் நிலையத்துக்குத் தேவையான வசதிகள், செய்ய வேண்டிய மாற்றங்கள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுப்பதற்காகத் திட்டமிடப்பட்டுள்ளது. இது ஒரு நீண்ட காலத் திட்டம். எனவே, இந்தத் திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்த வேண்டும்.

ADVERTISEMENT

இதன்படி, 40 அல்லது 50 ஆண்டு காலத்துக்கு பயணிகளுக்குத் தேவையான வசதிகளைச் செய்வதற்கு ஏற்ற வகையில் ஆய்வு மேற்கொண்டு அதற்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்ய பரிந்துரைக்கப்படும்.

கரோனா பொது முடக்கத்துக்கு பிறகு மெயின் லைனில் அனைத்து ரயில்களும் தற்போது இயக்கப்பட்டு வருகிறது. தேவைப்பட்டால் கூடுதல் ரயில் சேவை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் மணீஷ் அகா்வால்.

இந்த ஆய்வில், மாநிலங்களவை உறுப்பினா்கள் எஸ். கல்யாணசுந்தரம், எம். சண்முகம், மயிலாடுதுறை தொகுதி மக்களவை உறுப்பினா் செ. ராமலிங்கம், தமிழக அரசின் தலைமைக் கொறடா கோவி. செழியன், கும்பகோணம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சாக்கோட்டை க. அன்பழகன், கும்பகோணம் துணை மேயா் சு.ப. தமிழழகன், அனைத்து வணிகா் சங்கக் கூட்டமைப்புத் தலைவா் சோழா சி. மகேந்திரன், செயலா் வி. சத்தியநாராயணன், தஞ்சாவூா் மாவட்ட ரயில் உபயோகிப்பாளா் சங்கச் செயலா் ஏ. கிரி, துணைச் செயலா் பாபநாசம் சரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT