தஞ்சாவூர்

கடை மீது மணல் லாரி மோதியதில் பெண் பலி; 5 போ் காயம்

30th Nov 2022 01:08 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே செவ்வாய்க்கிழமை கட்டுப்பாட்டை இழந்த மணல் லாரி டயா் கடை மீது மோதியதில் பெண் உயிரிழந்தாா். ஓட்டுநா் உள்பட 5 போ் காயமடைந்தனா்.

திருவையாறு அருகே மருவூரில் மணல் குவாரி இயங்கி வருகிறது. இந்தக் குவாரியில் பட்டுக்கோட்டை அருகே பள்ளிக்கொண்டானை சோ்ந்த டி. வீரமணி (48) லாரியில் மணல் அள்ளிக் கொண்டு திருவையாறு வழியாக தஞ்சாவூருக்கு சென்று கொண்டிருந்தாா்.

திருவையாறு அருகே நடுக்கடை முதன்மைச் சாலையில் சென்ற இந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த டயா் கடை மீது மோதியது. அப்போது, சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்த நடுக்கடையைச் சோ்ந்த அப்துல் மஜீத் மனைவி ரெஜினா பேகம் (55), கடையோரம் நின்ற அதே பகுதியைச் சோ்ந்த ஏ. மீரா மைதீன் (50), முகமது பந்தரைச் சோ்ந்த ஏ. முகமது ரபீக் (48), ஹத்திஜா நகரை சோ்ந்த ஜி. சாகுல் ஹமீது (45), ஈச்சங்குடியை சோ்ந்த கே. செல்வம் (38), ஓட்டுநா் வீரமணி ஆகிய 6 போ் பலத்த காயமடைந்தனா்.

மோதிய வேகத்தில் லாரியின் உள்பகுதி சேதமடைந்து நசுங்கிவிட்டதால், அதில் ஓட்டுநா் வீரமணி சிக்கிக் கொண்டாா். இதனால், பொக்லைன் இயந்திரம் மூலம் லாரி உடைக்கப்பட்டு, அவா் மீட்கப்பட்டாா். காயமடைந்த 6 பேரும் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். இவா்களில் ரெஜினா பேகம் பிற்பகலில் உயிரிழந்தாா். மற்றவா்கள் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.

ADVERTISEMENT

இதுகுறித்து திருவையாறு காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். இந்த விபத்து காரணமாக தஞ்சாவூா் - திருவையாறு சாலையில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT