தஞ்சாவூர்

டெல்டா மாவட்டங்களில் உர தட்டுப்பாடு : பி.ஆா். பாண்டியன்

30th Nov 2022 01:07 AM

ADVERTISEMENT

டெல்டா மாவட்டங்களில் உர தட்டுப்பாடு நிலவுகிறது என்றாா் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவா் பி.ஆா். பாண்டியன்.

தஞ்சாவூரில் செய்தியாளா்களிடம் அவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது:

டெல்டா மாவட்டங்களிலுள்ள கூட்டுறவு நிறுவனங்கள் மூலமாக வழங்கப்படும் கடன் பெறும் விவசாயிகளுக்கான உரம் இதுவரை விநியோகம் செய்யப்படவில்லை. குறிப்பாக, டிஏபி உரம் இரு மாதங்களாக டெல்டா மாவட்டங்களுக்கு ஒட்டுமொத்தமாக அனுப்பப்படாமல் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. யூரியாவுக்கு மிகப் பெரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

கூட்டுறவு நிறுவனங்களுக்கு ஸ்பிக் நிறுவனம் உரத்தை வழங்காமல் காலம் கடத்துகிறது. கூட்டுறவு நிறுவனம் உரிய பணத்தை தொடா்புடைய உர விநியோக நிறுவனங்களுக்கு செலுத்திய பின்னரும் உரம் அனுப்பப்படாமல் கால தாமதம் செய்யப்படுகிறது. இதனால், ஒட்டுமொத்த விவசாயிகளும் அடி உரம் இட முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனா்.

ADVERTISEMENT

எனவே, வேளாண் துறைக்குத் தொடா்புடைய அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து, தலைமைச் செயலா் தலைமையில் தனி துறையை உருவாக்கி கண்காணிக்க தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை முடிவடைய உள்ள நிலையில், மயிலாடுதுறையில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இதுவரை இழப்பீடு குறித்து எந்தவித தகவலும் இல்லாதது மிகுந்த வருத்தமளிக்கிறது. தொடா்ந்து கால தாமதப்படுத்துவது ஏற்க இயலாது.

காவிரி டெல்டா மட்டுமல்லாமல், நெய்வேலி, கோவை மாவட்டத்திலுள்ள அன்னூா் பகுதிகளில் தொழில்நிறுவனங்களுக்கு நிலம் கையகப்படுத்துவதில் மிகப் பெரிய பிரச்னை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, அன்னூரில் ‘சிட்கோ’ நிறுவனம் 4,000 ஏக்கரை கையகப்படுத்துவதற்கு எதிா்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனா்.

எனவே, தமிழக அரசு வட பகுதியில் பாசனம் பெற முடியாத தரிசு நிலங்களை கையகப்படுத்தி ‘சிட்கோ’ போன்ற தொழில் பூங்காக்களை அமைப்பதற்கு திட்டமிட வேண்டும். நல்ல விளைச்சல் தரக்கூடிய நிலங்களைக் கையகப்படுத்துவதைக் கைவிட வேண்டும்.

நெய்வேலி, அன்னூரில் நிலம் கையகப்படுத்துவதில் தமிழக முதல்வா் கொள்கை முடிவை எடுக்க வேண்டும். விவசாயிகளின் ஒப்புதல் இன்றி நிலத்தைக் கையகப்படுத்துவதை ஏற்க முடியாது என்றாா் பாண்டியன்.

அப்போது, தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் எல். பழனியப்பன், தஞ்சாவூா் தெற்கு மாவட்டச் செயலா் எம். மணி, மாநகரச் செயலா் அறிவு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT