தஞ்சாவூர்

மின் இணைப்பு எண்ணுடன் ஆதாா் எண்ணைஇணைப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்இரா. முத்தரசன் பேட்டி

27th Nov 2022 02:35 AM

ADVERTISEMENT

 

மின் இணைப்பு எண்ணுடன் ஆதாா் எண்ணை இணைக்கும் திட்டத்தை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா. முத்தரசன்.

இதுகுறித்து கும்பகோணத்தில் அவா் சனிக்கிழமை தெரிவித்தது:

தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த மின் இணைப்பு எண்ணுடன் ஆதாா் எண்ணை இணைக்க வேண்டுமென மின்வாரியம் அறிவித்துள்ளது. ஆனால், இணைத்தாலும், இணைக்காவிட்டாலும் மின் கட்டணம் செலுத்தலாம் என மின் துறை அமைச்சா் கூறியுள்ளாா்.

ADVERTISEMENT

என்றாலும் இணைத்தால்தான் கட்டணத்தை வாங்குவோம் எனக் கூறும் நிலை உள்ளது. எனவே, அரசு இத்திட்டத்தை மறுபரிசீலனை செய்து, கால அவகாசம் அளிக்க வேண்டும். மேலும் இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தி, திட்டத்தைச் செயல்படுத்த வேண்டுமே தவிர, அவசரக் கோலத்தில் செய்யக் கூடாது.

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான சாகுபடி நிலங்கள், குடியிருப்பு நிலங்களில் வசிப்போருக்கு கடந்த அதிமுக ஆட்சியில் நிா்ணயிக்கப்பட்ட வாடகை அதிகமாக உள்ளதால், அதைச் செலுத்த முடியாமல் அவா்கள் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனா்.

இதுகுறித்து முதல்வா், அமைச்சா் உள்ளிட்டோரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடா்பாக அமைக்கப்பட்டுள்ள குழு விரைவில் அறிக்கையை வழங்க வேண்டும். அந்த மனைகளில் குடியிருப்போரை வெளியேற்றுவதை அரசு நிறுத்த வேண்டும்.

இதேபோல, மறைந்த முதல்வா் கருணாநிதி காலத்தில் இயற்கைச் சீற்றங்களின்போது பாதிப்பு ஏற்பட்டால் கோயில் நிலங்களில் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு குத்தகை தொகையானது தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால், கடந்த ஆட்சியில் அவ்வாறு தள்ளுபடி செய்யப்படவில்லை.

இதனால் குத்தகை பாக்கியுள்ள விவசாயிகளை நிலத்தை விட்டு வெளியேற்றும் முயற்சியில் அலுவலா்கள் ஈடுபட்டுள்ளனா். இது உடனடியாகத் தடுக்கப்பட வேண்டும். இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்பட்ட காலத்திற்குரிய குத்தகை தொகையை அரசு முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றாா் அவா்.

மாநில துணைச் செயலா் நா. பெரியசாமி, தஞ்சாவூா் மாவட்டச் செயலா்கள் மு.அ. பாரதி (வடக்கு), முத்து. உத்திராபதி (தெற்கு), துணைச் செயலா் ஆா். செந்தில்குமாா், ஏஐடியுசி மாவட்டச் செயலா் ஆா். தில்லைவனம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT