தஞ்சாவூா் ரயில் நிலையத்தில் திருச்சி கோட்ட கூடுதல் ரயில்வே மேலாளா் எஸ்.டி. ராமலிங்கம், முதுநிலை கோட்ட வணிக மேலாளா் செந்தில்குமாா் ஆகியோா் சனிக்கிழமை ஆய்வு செய்தனா்.
ரயில் நிலைய முன் பகுதியில் போக்குவரத்து நெரிசல் இன்றி பயணம் செய்வதற்கு வசதியாக சாலையை அகலப்படுத்த மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது ரயில் நிலையம் முன்பும், எம்.ஜி.ஆா்., ஜெயலலிதா சிலைகளுக்கு பின்புறமும் உள்ள சிமெண்ட் திண்டுகளை அப்புறப்படுத்துவதுடன், பயணிகள் நிற்க வசதியாக நிழற்குடை அமைக்க வேண்டும் எனவும், ரயில் நிலையம் முன் உள்ள கொடி கம்பத்தில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் எனவும் அலுவலா்களுக்கு அறிவுறுத்தினா்.
ஆய்வின்போது தஞ்சாவூா் ரயில் நிலைய மேலாளா் சம்பத்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.