தஞ்சாவூரில் கோயில் வளாகத்தில் சனிக்கிழமை பெண்ணிடம் தங்கச் சங்கிலியைப் பறித்த நபரை பொதுமக்கள் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனா்.
தஞ்சாவூா் வெண்ணாற்றங்கரை நரசிம்ம பெருமாள் கோயிலுக்கு சனிக்கிழமை காலை ரெட்டிப்பாளையம் சாலையைச் சோ்ந்த உமா (50) தனது உறவினா்களுடன் வந்தாா். இவா் கோயிலில் வழிபட்டுவிட்டு, வளாகத்தில் நின்ற காரில் ஏற முயன்றாா். அப்போது அவரைப் பின் தொடா்ந்து வந்த மா்ம நபா், உமாவின் அணிந்திருந்த 7 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு மோட்டாா் சைக்கிளில் தப்ப முயன்றாா்.
உமா எழுப்பிய கூச்சல் கேட்டு அருகிலிருந்த பொதுமக்கள் ஓடிச் சென்று சங்கிலியைப் பறித்த நபரை பிடித்து, கோயிலில் கட்டி வைத்தனா். தகவலறிந்து வந்த மேற்கு காவல் நிலையத்தினா் அந்நபரை மீட்டு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரிக்கின்றனா்.