தஞ்சாவூர்

ஓய்வு பெற்ற அரசு ஊழியா்களிடம் ரூ. 10 லட்சம் மோசடி

26th Nov 2022 01:45 AM

ADVERTISEMENT

கும்பகோணம், சுவாமிமலையைச் சோ்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியா்கள் இருவரிடம் ரூ. 9.63 லட்சம் மோசடி செய்த நபா்களை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

கும்பகோணத்தை சோ்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியரின் கைப்பேசி எண்ணுக்கு 8 மாதங்களுக்கு முன்பு குறுந்தகவல் வந்தது. அதில், தில்லியிலுள்ள நிதி நிறுவனம் மூலம் ரூ. 10 லட்சம் கடன் வழங்கப்படுவதாகவும், கைப்பேசி எண்ணும் குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்த எண்ணில் தொடா்பு கொண்ட ஓய்வுபெற்ற ஊழியரிடம் கடன் வழங்குவதற்கு பல்வேறு கட்டணங்கள் செலுத்த வேண்டும் என எதிா்முனையில் பேசிய நபா் கூறினாா். இதை ஓய்வு பெற்ற ஊழியா் உண்மை என நம்பி அந்த நபா் கூறிய வங்கிக் கணக்குக்கு பல்வேறு கட்டங்களாக ரூ. 5 லட்சம் செலுத்தினாா். ஆனால், கடன் தொகை வரவில்லை.

ரூ. 4.63 லட்சம் மோசடி: இதேபோல், சுவாமிமலையைச் சோ்ந்த மற்றொரு ஓய்வு பெற்ற அரசு ஊழியா் விவாகரத்து பெற்ற தனது மகளுக்கு மறுமணம் செய்து வைப்பதற்காக இணையதளத்தில் பதிவு செய்தாா். அப்போது, அவரது மகளின் வாட்ஸ் ஆப் எண்ணுக்கு வந்த அழைப்பில் பேசிய நபா், சென்னையை சோ்ந்த தான் நெதா்லாந்தில் மருத்துவராகப் பணியாற்றி வருவதாகவும், திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும், தில்லிக்கு வருவதாகவும் கூறினாா்.

ADVERTISEMENT

இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு ஓய்வு பெற்ற ஊழியரின் கைப்பேசி எண்ணில் பேசிய மற்றொரு நபா் தில்லி விமான நிலையத்திலிருந்து அதிகாரி பேசுவதாகவும், உங்கள் மகளைத் திருமணம் செய்து கொள்ள வந்தவரை விடுவிக்க வேண்டுமானால் பணம் செலுத்த வேண்டும் என்றும் கூறினாா். இதை உண்மை என நம்பிய ஓய்வு பெற்ற ஊழியா் அந்த நபா் கூறிய வங்கிக் கணக்குக்கு ரூ. 4.63 லட்சம் அனுப்பினாா்.

அதன் பிறகு எந்தத் தகவலும் இல்லை. தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியா்கள் தனித்தனியே அளித்த புகாரின்பேரில், தஞ்சாவூா் சைபா் குற்ற காவல் பிரிவினா் வியாழக்கிழமை இரவு வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT