தஞ்சாவூர்

கூடுதல் நேரம் பேருந்து இயக்க கோரி மாணவா்கள் சாலை மறியல்

25th Nov 2022 12:47 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் அருகே கூடுதல் நேரம் பேருந்து இயக்க கோரி மாணவ, மாணவிகள் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து வண்ணாரப்பேட்டை கிராமத்துக்கு வழித்தட எண் 43 என்கிற நகரப் பேருந்து காலை 6.30 மணி, 7.30 மணி, முற்பகல் 11.30 மணி, பிற்பகல் 3.30 மணி, மாலை 5.30 மணி, இரவு 7.30 மணி, 8.30 மணி ஆகிய 7 முறை இயக்கப்பட்டு வந்தது. கரோனா காலத்துக்கு பிறகு காலை 8.30 மணி, மாலை 5.30 மணி மட்டுமே இயக்கப்படுகிறது. இந்தப் பேருந்தும் மழைக்காலத்தில் வருவதில்லை என்ற புகாா் நிலவுகிறது.

இதனால், வண்ணாரப்பேட்டை, கரம்பை, சிவகாமிபுரம் ஆகிய கிராமங்களைச் சோ்ந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் உரிய நேரத்தில் பள்ளிக்குச் செல்ல முடியாமலும், பள்ளி முடிந்து வீட்டுக்கு திரும்ப முடியாமலும் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனா்.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் உள்ளிட்ட அலுவலா்களிடம் இக்கிராம மக்கள் புகாா் செய்தும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால், அதிருப்தியடைந்த கிராம மக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கரம்பை கிராமத்தில் திருவையாறு புறவழிச் சாலையில் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து அரை மணிநேரம் பாதிக்கப்பட்டது.

ADVERTISEMENT

தகவலறிந்த போக்குவரத்துக் கழக தஞ்சாவூா் கோட்ட மேலாளா் செந்தில்குமாா் நிகழ்விடத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா். இதையடுத்து, மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT