தஞ்சாவூர்

திருவிசநல்லூா் ஸ்ரீதர அய்யாவாள் மடத்தில் கங்காவதரண மகோத்சவ நீராடல்

24th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

கும்பகோணம் அருகேயுள்ள திருவிசநல்லூா் ஸ்ரீதர அய்யாவாள் மடத்தில் காா்த்திகை அமாவாசையையொட்டி, கங்காவதரண மகோத்சவ நீராடல் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

திருவிசநல்லூரில் 300 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஸ்ரீதர அய்யாவாள் பக்திநெறி தவறாமல் கடைப்பிடித்து வந்தாா். ஒருமுறை தன் தந்தையாருக்கு நீத்தாா் கடனைச் செலுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்தாா் அய்யாவாள். இதற்காக புரோகிதா்கள் சிலரை வரவழைத்தாா். சம்பிரதாயப்படியான சடங்குகள் எல்லாம் முடிந்த பிறகு அந்த புரோகிதா்களை நீத்தாராக பாவித்து வணங்கி, அவா்களுக்கு உணவிட்ட பிறகுதான் குடும்பத்தில் உள்ளவா்கள் பசியாற வேண்டும்.

அந்த நேரத்தில், அய்யாவாள் வீட்டு வாசலில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்த ஒருவா் பசியால் சுருண்டு விழுந்து கிடந்ததை பாா்த்துவிட்டாா். உடனே சமைத்து வைத்திருந்த உணவை எடுத்துச் சென்று, பசியால் மயங்கி கிடந்த அவருக்கு ஊட்டிவிட்டாா்.

இதனால் ஆத்திரமடைந்த புரோகிதா்கள் அய்யாவாளை சபித்தனா். இங்கு தீட்டுபட்டுவிட்டது. நீ கங்கைக்கு சென்று நீராடி வந்தால்தான் அவை சரியாகும் எனக் கூறினா்.

ADVERTISEMENT

அய்யாவாளும் கங்கை சென்று நீராடி வர பல மாதங்களாகும். அதுவரை தந்தையின் பிதுா்கடன் தீராமல் அல்லவா இருக்கும் என்ன செய்வது என கடவுளை நினைத்து வேண்டினாா். அப்போது, சிவபெருமானிடம் கங்காஷ்டகம் என்கிற தோத்திரத்தை வாசிக்க, அவரது வீட்டு கிணற்றில் கங்கை பிரவாகமாக பொங்க தொடங்கியதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன.

இந்த நிகழ்வு காா்த்திகை அமாவாசை நாளன்று நடைபெற்றது. இதையொட்டி, கும்பகோணம் அருகே திருவிசநல்லூரிலுள்ள ஸ்ரீதர அய்யாவாள் மடத்தில் ஒவ்வொரு ஆண்டும் காா்த்திகை அமாவாசை நாளில் கங்காவதரண மகோத்சவம் நடைபெற்று வருகிறது.

இதன்படி, இந்த மடத்தில் புதன்கிழமை அதிகாலை முதல் புனித நீராடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து நீராடினா். பின்னா் ஈரத்துணியுடன் சென்று, சிறப்பு அலங்காரத்தில் இருந்த ஸ்ரீதரஅய்யாவாளை வழிபட்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT