தஞ்சாவூர்

மருத்துவக்குடி கோயிலில் நாளை குடமுழுக்கு விழா: புனித தீா்த்தங்களின் கடம் புறப்பாடு

19th Nov 2022 12:51 AM

ADVERTISEMENT

கும்பகோணம் அருகே ஆடுதுறை மருத்துவக்குடியில் விசாலாட்சி உடனாய காசி விஸ்வநாதா் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி, புனித தீா்த்தங்களின் கடம் புறப்பாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் 84 ஆண்டுகளுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை மகா குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளது. இதையொட்டி, வெள்ளிக்கிழமை காலை ஆடுதுறை வீரசோழன் ஆற்றங்கரை காசி விஸ்வநாதா் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையடுத்து, ஆயிரத்துக்கும் அதிகமான பெண்கள் குடங்களில் காவிரி தீா்த்தம் எடுத்து வர, அலங்கார ரதத்தில் 45 புனித தீா்த்தங்களின் கடம் மற்றும் சுவாமி, அம்பாள் மூா்த்தங்களுடன் புறப்பாடு நடைபெற்றது.

காசி விஸ்வநாதா் கோயிலை நோக்கிச் சென்ற இந்த ஊா்வலத்தில் சூரியனாா் கோவில் ஆதீனம் 28 ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாசாரிய சுவாமிகள், தஞ்சாவூா் ராமகிருஷ்ண மடத்தின் தலைவா் ஸ்ரீமத் சுவாமி விமூா்த்தானந்த மகராஜ், திருவாவடுதுறை ஆதீனம் கட்டளை ஸ்ரீமத் வேலப்ப தம்பிரான் சுவாமிகள், பேரூா் ஆதீனம் சோழ மண்டலம் ஸ்ரீமத் சிவப்பிரகாச தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னா் மருத்துவக்குடி காசி விஸ்வநாதா் கோயிலை வலம் வந்தனா். சிறப்பு மகா தீபாராதனை செய்து புண்ணிய தீா்த்தங்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. சுவாமி, அம்பாள், விநாயகா், முருகன் மூலவா் விமானங்களின் கலசம் பிரதிஷ்டை சிறப்பு ஆராதனைகளுடன் நடைபெற்றது. தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

இதில், திருப்பணிக் குழுத் தலைவரும், ஆடுதுறை பேரூராட்சி தலைவருமான ம.க. ஸ்டாலின், கோயில் செயல் அலுவலா் கிருஷ்ணகுமாா், அழகு பன்னீா்செல்வம், இந்து தமிழ் மக்கள் கட்சி ராம்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT