தஞ்சாவூர்

தேங்காய்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும்: குறைகேட்பு நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

DIN

நெல், கரும்பு போல, தேங்காய்களையும் அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என தஞ்சாவூா் ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் விவசாயிகளின் கருத்துகள்:

சுவாமிமலை சுந்தர. விமல்நாதன்: கடந்த 2021 - 22 ஆம் ஆண்டில் குறுவை, சம்பா, தாளடிப் பயிா்க் காப்பீடு செய்தவா்களுக்கு இதுவரை இழப்பீட்டுத் தொகை அறிவிக்கப்படாமலும், வழங்கப்படாமலும் உள்ளன. இவா்களுக்கு கால தாமதத்துக்கான வட்டியுடன் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும்.

பொன்னவராயன்கோட்டை வா. வீரசேனன்: காவிரியில் தண்ணீா் வந்தாலும் சாகுபடி செய்வதற்குப்

பயிா்க்கடன் வேண்டும். இதற்காக வங்கியை நாடும்போது அடங்கல் சான்று கேட்கின்றனா். கடந்த ஆண்டு அடங்கல் சான்று கிடைக்காததால் விவசாயிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினா்.

ஆட்சியா்: நிகழாண்டு அடங்கல் வழங்குமாறு அனைத்து வட்டாட்சியா்களுக்கும் அறிவுறுத்தப்படும்.

தோழகிரிப்பட்டி கோவிந்தராஜ்: குருங்குளம் அறிஞா் அண்ணா சா்க்கரை ஆலையில் பிற்பகுதியில் கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு இன்னும் பணம் கிடைக்கவில்லை. இத்தொகையை விரைவில் வழங்க வேண்டும்.

ஆட்சியா்: இந்த ஆலை விவசாயிகள் வழங்கிய கரும்பில் சா்க்கரை கட்டுமானம் 9.22 சதவிகிதம் எட்டியிருக்கிறது. இந்த சாதனை படைத்த விவசாயிகளுக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ராயமுண்டான்பட்டி என்.வி. கண்ணன்: மேட்டூா் அணை முன்னதாக திறக்கப்பட்டுள்ள நிலையில், காவிரி நீா் வருவதற்குள்ளாகத் தூா் வாரும் பணியைக் கடைமடைப் பகுதி வரை செய்ய வேண்டும்.

அம்மையகரம் ஏ.கே.ஆா். ரவிச்சந்தா்: கடைமடைப் பகுதி வரை தண்ணீா் செல்லும் வகையில் தூா் வாரும் பணி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால், இப்போது நடைபெறும் தூா் வாரும் பணியில் முறைகேடு நிகழ்கிறது.

ஆட்சியா்: மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் 117 தூா் வாரும் பணிகளில் 40 பணிகளை நானே நேரில் சென்று ஆய்வு செய்தேன். அவற்றில் எதிலும் முறைகேடு இல்லை. முறைகேடுகளை அனுமதிக்கமாட்டோம்.

ஆம்பலாப்பட்டு அ. தங்கவேல்: நல்ல தரமான விதை விதைத்தால்தான் விளைச்சல் நன்றாக இருக்கும். ஆனால், பட்டுக்கோட்டை பகுதியில் விதை நெல்லில் புறத்தூய்மை அகற்றப்படாமல் தனியாா் கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. இதனால், விளைச்சல் பாதிக்கப்படும் நிலை உள்ளது.

மல்லிப்பட்டினம் ஏ. கமால்பாட்சா: நெல், கரும்புக்கு அடுத்து பெரிய அளவில் தென்னை சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. ஆனால், கடந்த ஆண்டு தேங்காய் ரூ. 22-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், நிகழாண்டு ரூ. 8-க்கு விலை கேட்க ஆளில்லை. இதனால், தென்னை விவசாயிகள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகியுள்ளனா். எனவே, நெல், கரும்பு போல தேங்காய்களையும் அரசே கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

மதுக்கூா் ராமச்சந்திரன்: தேங்காய் விலை வீழ்ச்சியால் தென்னை விவசாயிகள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகியுள்ளனா். இதுதொடா்பாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேங்காய்களை உடைத்து போராட்டம்:

கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக, தேங்காய் விலை வீழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில், ஆட்சியரக வளாகத்தில் விவசாயிகள் தேங்காய்களை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில், ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய்களை அரசே கொள்முதல் செய்ய வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

டிஆர்டிஒ-இல் டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு தொழில்பழகுநர் பயிற்சி

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

SCROLL FOR NEXT