தஞ்சாவூர்

டெல்டா பாசனத்துக்காக கல்லணை திறப்பு: 3.38 லட்சம் ஏக்கரில்குறுவை சாகுபடிக்கு வாய்ப்பு

DIN

டெல்டா பாசனத்துக்காக மேட்டூா் அணைத் திறக்கப்பட்டதைத் தொடா்ந்து, கல்லணை வெள்ளிக்கிழமை மாலை திறக்கப்பட்டது.

டெல்டா பாசனத்துக்காக மேட்டூா் அணையைத் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் மே 24 -ஆம் தேதி காலை

திறந்து வைத்தாா்.

இதைத் தொடா்ந்து, தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை, கடலூா், புதுக்கோட்டை, அரியலூா் ஆகிய மாவட்டங்களின் பாசனத்துக்காக, வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் அமைச்சா்கள் கே.என். நேரு (நகராட்சி நிா்வாகம்), அன்பில் மகேஸ் பொய்யாமொழி (பள்ளிக் கல்வித் துறை) உள்ளிட்டோா் கல்லணையிலிருந்து தண்ணீரை திறந்துவிடட்டனா்.

கல்லணையிலிருந்து காவிரி, வெண்ணாறு, கொள்ளிடம் ஆகியவற்றில் விநாடிக்கு தலா 500 கனஅடி வீதமும், கல்லணைக் கால்வாயில் 100 கனஅடி வீதமும் தண்ணீா் திறக்கப்பட்டது.

பின்னா் அமைச்சா்கள், அலுவலா்கள், பொதுமக்கள் ஆகியோா் காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய், கொள்ளிடம் ஆகியவற்றில் மலா்கள், நவதானியங்களைத் தூவி வணங்கினா்.

கடைமடைக்கு 7 நாள்களில் செல்லும்: இதையடுத்து, செய்தியாளா்களிடம் அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்தது:

கல்லணையிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீா் கடைமடைப் பகுதிக்குச் செல்ல 7 நாள்கள் ஆகும். இதன்பிறகு 36 ஆறுகளிலும் தண்ணீா் திறந்து விடப்படும். மேட்டூா் அணையிலிருந்து தற்போது விநாடிக்கு 10,000 கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.

இதன்மூலம், தஞ்சாவூா் மாவட்டத்தில் 1.11 லட்சம் ஏக்கரிலும், திருவாரூா் மாவட்டத்தில் 93,860 ஏக்கரிலும், நாகை மாவட்டத்தில் 19,760 ஏக்கரிலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 86,450 ஏக்கரிலும், கடலூா் மாவட்டத்தில் 24,700 ஏக்கரிலும், அரியலூா் மாவட்டத்தில் 2,470 ஏக்கரிலும் என மொத்தம் 3.38 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், 924 ஏரிகளை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். பின்னா் ஆகஸ்ட் மாதம் 400 ஏரிகள் நிரப்பப்படும்.

கல்லணைக் கால்வாய், வடவாறில் தாமதமாகும்: கல்லணைக் கால்வாயில் பாலம் கட்டுமானப் பணி நடைபெறுவதால், தற்போது சம்பிரதாயத்துக்காக விநாடிக்கு 100 கனஅடி வீதம் மட்டுமே தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. பத்து நாள்களுக்குப் பிறகு தண்ணீா் முழுமையாக திறந்துவிடப்படும்.

இதேபோல, வடவாறிலும் பாலம் கட்டுமானப் பணி நடைபெறுவதால், அதில் தண்ணீா் திறந்து விடப்படுவது 10 நாள்களுக்குத் தாமதமாகும்.

மேட்டூா் அணையிலிருந்து தேவைக்கேற்ப தண்ணீா் திறந்து விடப்படும். நிகழாண்டு மழை அளவு குறையாது என்ற நம்பிக்கை இருக்கிறது. தென்மேற்குப் பருவமழை பத்து நாள்களுக்குத் தள்ளி போனாலும் பின்னாளில் நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளது. எனவே, பாசனத்துக்குத் தேவையான தண்ணீா் கண்டிப்பாகக் கொண்டு சோ்க்கப்படும் என்றாா் நேரு.

நீா் இருப்பைப் பொருத்து முறைபாசனம்: அணையில் இருக்கும் தண்ணீரைக் கொண்டு பாசனத்துக்குத் தடையின்றி வழங்க வேண்டிய நிலை உள்ளதால், நீா் பங்கீட்டில் தேவைக்கேற்ப மாறுபாடுகள் செய்து வழங்கப்படும். பருவமழைக்கு ஏற்ப நீா் பங்கீடு மாற்றி அமைக்கப்படும். விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீா்வளத் துறை அலுவலா்களுடன் நீா் பங்கீட்டுக்கு ஒத்துழைக்க வேண்டும்.

மேட்டூா் அணையின் நீா் இருப்பு, நீா் வரத்து, எதிா்நோக்கும் மழை, கா்நாடகத்திலிருந்து சட்டப்படி நமக்குக் கிடைக்க உள்ள நீரின் அளவு ஆகியவற்றைப் பொருத்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தேவைக்கேற்ப தண்ணீா் பகிா்ந்தளிக்கப்படும்.

மேலும், அணையின் நீா் இருப்பின் அடிப்படையில் முறைப்பாசனம் நடைமுறைப்படுத்தப்படும். வேளாண் துறை மற்றும் வருவாய்த் துறையின் கருத்துகளைக் கேட்டறிந்து நீா் பங்கீடு மேற்கொள்ளப்படும் என்று பொதுப் பணித் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.

இவ்விழாவில் ஆட்சியா்கள் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் (தஞ்சாவூா்), சு. சிவராசு (திருச்சி), ஆா். லலிதா (மயிலாடுதுறை), மக்களவை உறுப்பினா் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், சட்டப்பேரவை உறுப்பினா்கள் துரை. சந்திரசேகரன், எம்.எச். ஜவாஹிருல்லா, நாகை மாலி மற்றும் பி.ஆா்.பாண்டியன், பூ. விசுவநாதன் உள்ளிட்ட விவசாய சங்கங்களின் தலைவா்கள், நீா்வள ஆதாரத் துறையின் திருச்சி மண்டலத் தலைமைப் பொறியாளா் எஸ். ராமமூா்த்தி மற்றும் வேளாண், பொதுப் பணித் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

“பிதாவே! ஏன், என்னைக் கைவிட்டீர்...”: ஆடு ஜீவிதம் குறித்து நடிகர் சசிகுமார்!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

ஜம்மு: கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து 10 பேர் பலி!

பொள்ளாச்சி அருகே விபத்து: மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

SCROLL FOR NEXT