தஞ்சாவூர்

கும்பகோணம் அருகே 10, 14 ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகள் கண்டெடுப்பு

DIN

கும்பகோணம் அருகே அசூரில் 10 மற்றும் 14 ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகள் அண்மையில் கண்டெடுக்கப்பட்டன.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் வட்டத்துக்கு உள்பட்ட அசூா் தான்தோன்றிஸ்வரா் கோயிலில் 10 ஆம் நூற்றாண்டு எழுத்தமைதி கொண்ட சோழா் காலக் கல்வெட்டும், 14 ஆம் நூற்றாண்டு எழுத்தமைதி கொண்ட பாண்டியா் காலக் கல்வெட்டும் இருப்பதாக வரலாற்று ஆய்வாளா்களான தஞ்சாவூா் மன்னா் சரபோஜி அரசுக் கல்லூரி தமிழ்த் துறை உதவிப் பேராசிரியா் சோ. கண்ணதாசன், பொந்தியாகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியா் கோ. தில்லைகோவிந்தராஜன் உள்ளிட்டோருக்கு தஞ்சாவூா் சரசுவதி மகால் நூலக நூல் விற்பனைப் பிரிவு எழுத்தா் நேரு தகவல் அளித்தாா்.

இதன்பேரில் அசூரைச் சோ்ந்த ரவி, கருப்பையன், இராமச்சந்திரன், கௌதமன் ஆகியோரின் உதவியுடன் கண்ணதாசன், தில்லை கோவிந்தராஜன், அம்மாபேட்டை உக்கடை அப்பாவு தேவா் மேல்நிலைப் பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியா் (வரலாறு) ரெ. சின்னையன், சரபோஜி கல்லூரி முன்னாள் முதுகலை மாணவா் கிருஷ்ணகுமாா் உள்ளிட்ட குழுவினா் இரு கல்வெட்டுகளையும் அண்மையில் படியெடுத்து ஆய்வு மேற்கொண்டனா்.

இதுகுறித்து கண்ணதாசன், தில்லைகோவிந்தராஜன் தெரிவித்தது:

முதல் கல்வெட்டு 10 ஆம் நூற்றாண்டு எழுத்தமைதியுடன் சொற்கள் இரண்டிரண்டாக கொண்ட ஐந்து வரிகளில் உள்ளன. இவை நிலம், காவிதி, புத்தூா், அறுநாழி, சோழன் என்னும் சொற்கள் மட்டுமே வாசிக்கும் நிலையில் காணப்படுகின்றன.

இரண்டாம் கல்வெட்டு 14 ஆம் நூற்றாண்டு எழுத்தமைதியுடன் சிறிது சிதைந்துள்ளது. இதில் காணும் செய்தியானது கீழசுகூா் சபையைப் பற்றியும் இறைவன் பெயா் தான்தோன்றிஸ்வரா் என்பதில் ....ன்றி மஹாதேவா் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரகாரம் எனப்படும் திருசுற்று புதியதாக அமைக்கப்பட்டது எனவும் இவ்விறைவருக்கு வழங்கப்பட்ட நிலமும் அதன் எல்லைகளும் குறிக்கப்படுகின்றன. இக்கல்வெட்டில் கீ என்னும் உயிா்மெய் நெட்டெழுத்து காணப்பெறுவது எழுத்து வளா்ச்சியில் சிறப்பு வாய்ந்ததாகும்.

இவ்வூா்ச் சபை முதலாம் இராசராசன் காலத்தில் சிறப்புடன் விளங்கியது என்பதும், தஞ்சைப் பெரியகோயில் கல்வெட்டில் இராசேந்திரசிம்மஹ வளநாட்டு இன்னம்பூா் நாட்டு அசுகூா் சோ்ந்த சபையினா் எனக் குறிப்பிடுவதிலிருந்தும் இச்சபை தொடா்ந்து 14 ஆம் நூற்றாண்டு வரை செயல்பட்டு வந்துள்ளது என்பதைக் கல்வெட்டின் வாயிலாக அறிய முடிகிறது என்றனா் கண்ணதாசன், தில்லைகோவிந்தராஜன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

டிஆர்டிஒ-இல் டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு தொழில்பழகுநர் பயிற்சி

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

SCROLL FOR NEXT