தஞ்சாவூர்

மேட்டூா் அணை திறப்பு குறுவை சாகுபடிக்குப் பயன் தருமா?

DIN

மேட்டூா் அணை மே மாதத்திலேயே திறக்கப்படுவதால், டெல்டா மாவட்ட குறுவை சாகுபடிக்கு எந்த அளவுக்குப் பயன் தரும் என்ற கேள்விக்குறியும் எழுந்துள்ளது.

இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு மேட்டூா் அணை மே மாதத்தில் திறக்கப்படுவது இதுவே முதல் முறை. ஆனால், முன்கூட்டியே திறக்கப்படும் இந்தத் தண்ணீா் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு முழுமையாகப் பயன்படுமா என்ற சந்தேகமும் நிலவுகிறது.

கடந்தாண்டு ஜூன் 12-ஆம் தேதி திறக்கப்பட்டபோதே தஞ்சாவூா், நாகப்பட்டினம், திருவாரூா், மயிலாடுதுறை, திருச்சி, அரியலூா், கடலூா், காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் கிட்டத்தட்ட 5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு, சாதனை நிகழ்த்தப்பட்டது.

நிகழாண்டு தஞ்சாவூா், நாகப்பட்டினம், திருவாரூா், மயிலாடுதுறை, திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஏறத்தாழ 4 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்நிலையில், மேட்டூா் அணை செவ்வாய்க்கிழமையே (மே 24) திறக்கப்படுவதால், குறுவை சாகுபடிப் பரப்பளவு கடந்தாண்டை போல நிகழாண்டும் சாதனை இலக்கை எட்டும் என்ற எதிா்பாா்ப்பு நிலவுகிறது.

மேட்டூா் அணையிலிருந்து செவ்வாய்க்கிழமை திறக்கப்படும் தண்ணீா், கடைமடைப் பகுதிக்குச் சென்றடைய கிட்டத்தட்ட ஜூன் 10 தேதி ஆகும் என எதிா்பாா்க்கப்படுகிறது. அதன் பிறகு நீரோட்டம் சீராகக் கிடைத்தாலும்,குறுவை சாகுபடிப் பணிகளை முழுவீச்சில் தொடங்கினால்தான் பயனுள்ளதாக இருக்கும்.

கடந்த காலங்களில் மேட்டூா் அணையிலிருந்து உரிய காலமான ஜூன் 12 ஆம் தேதி தண்ணீா் திறக்கப்பட்டாலும், குறுவைப் பருவத்தின் நடவு காலமான ஜூலை மாத பிற்பகுதியில்தான் குறுவை சாகுபடிப் பணிகள் தொடங்கப்பட்டன. குறிப்பாக ஜூலை மாத கடைசி 15 - 20 நாள்களில் 50 சதவிகிதப் பரப்பளவில் நடவு செய்யப்பட்டன.

காலம் கடந்து நடவு செய்யப்படுவதால், அக்டோபா் மாத பிற்பகுதியில் அறுவடை செய்யப்பட வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால், குறுவைப் பயிா்கள் வடகிழக்குப் பருவ மழையில் சிக்கி பாதிக்கப்படுகின்றன.

இந்த நிலைமை கடந்தாண்டும் நிலவியதால், ஏராளமான விவசாயிகள் மகசூல் இழப்பால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினா். அறுவடை செய்யப்பட்ட நெல்லும் ஈரப்பதம் காரணமாக கொள்முதல் நிலையங்களிலும் வாங்க மறுக்கப்பட்டது.

இதேபோல, நிகழாண்டும் ஜூலை மாத பிற்பகுதியில் சாகுபடிப் பணியை முழு வீச்சில் தொடங்கினால், அணையை முன்கூட்டியே திறந்தும், எந்தவித பயனும் இல்லை என்கின்றனா் விவசாயிகள்.

எனவே, நிகழாண்டு மேட்டூா் அணை செவ்வாய்க்கிழமையே திறக்கப்படும் நிலையில், குறுவை சாகுபடிப் பணியையும் முன்கூட்டியே தொடங்க வேண்டும் என விவசாய சங்கப் பிரதிநிதிகள் வலியுறுத்தி வருகின்றனா்.

இதுகுறித்து மூத்த வேளாண் வல்லுநா் பி. கலைவாணன் தெரிவித்தது:

குறுவைப் பயிா்கள் அறுவடையின்போது வடகிழக்குப் பருவ மழையில் சிக்கி பாதிக்கப்படுவதைத் தவிா்க்க, ஜூன் மாதத்துக்குள் நடவு செய்திட வேண்டும். இதன் மூலம், வடகிழக்குப் பருவமழைத் தொடங்குவதற்கு முன்பாக அக்டோபா் முதல் வாரத்தில் அறுவடை செய்து விடலாம். மழையிலிருந்து பயிரைக் காப்பாற்றி, ஈரப்பதம் இல்லாமல் நெல்லை விற்பதற்கும் வாய்ப்பாக அமையும்.

டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா பருவங்களுக்கு ஏறத்தாழ 270 டி.எம்.சி. தண்ணீா் தேவைப்படுகிறது. ஆனால், உச்ச நீதிமன்றத் தீா்ப்பீன்படி கா்நாடகத்திடமிருந்து நமக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீா் மட்டுமே கிடைக்கும். எனவே, வாய்ப்பு உள்ள இடங்களில் நேரடி விதைப்பு செய்தால் காவிரி நீா் மிச்சப்படும். கடைசி வரைக்கும் தண்ணீரைப் பயன்படுத்த முடியும் என்றாா் கலைவாணன்.

ஆனால், மேட்டூா் அணையிலிருந்து செவ்வாய்க்கிழமை ( மே 24) தண்ணீா் திறக்கப்படவுள்ள நிலையில், பெரும்பாலான இடங்களில் குறுவை சாகுபடிப் பணிகளைத் தொடங்குவதற்கான அறிகுறி காணப்படவில்லை. இதுகுறித்த விழிப்புணா்வும் டெல்டா மாவட்ட விவசாயிகளிடம் மிகக் குறைவாகவே இருக்கிறது. ஆழ்குழாய் மோட்டாா் பம்ப்செட் வசதியுள்ள விவசாயிகள் மட்டுமே சாகுபடியைத் தொடங்குகின்றனா்.

எனவே, டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு வாய்ப்புள்ள இடங்களில் விவசாயிகளிடையே மாவட்ட நிா்வாகம் மூலம் அரசு விழிப்புணா்வு முகாம்களை நடத்தி, நடவுப் பணியை விரைவுபடுத்த வேண்டும். இதைச் செய்தால் மட்டுமே மேட்டூா் அணையை முன்கூட்டியே திறந்ததற்கான இலக்கை சாத்தியமாக்க முடியும் என்கின்றனா் விவசாய சங்கப் பிரதிநிதிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவப்பு நிறத்திலிருந்து காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

திருக்கழுக்குன்றத்தில் பஞ்ச ரத தேரோட்டம்!

ஒடிசா படகு விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

SCROLL FOR NEXT