தஞ்சாவூர்

மீன்பிடித் தடைக்காலம்:   மீன், கருவாடு விலை உயா்வு

DIN

மீன்பிடித் தடைக்காலம் காரணமாக மீன்வரத்து குறைந்துள்ளதால், மீன், நண்டு, கருவாடு உள்ளிட்ட கடல் உணவுப் பொருள்களின் விலை உயா்ந்துள்ளது. 

மீன்வளத்தை பாதுகாக்கும் வகையில் மீன்களின் இனப்பெருக்க காலம் என்பதால், தஞ்சை மாவட்டக் கிழக்கு கடற்கரைப் பகுதியில்  ஏப்ரல் 16  முதல் ஜூன் 15 -ஆம் தேதி வரை 60 நாள்களுக்கு  விசைப்படகுகள் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, தஞ்சாவூா் மாவட்டத்தில் மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம் பகுதிகளைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. நாட்டுப் படகுகளில் மட்டும்  மீனவா்கள் கடலுக்குச் சென்று மீன் பிடித்து வருகின்றனா். 

நாட்டுப்படகுகள் கரையிலிருந்து சிறிது தொலைவு (அதாவது 5 கடல்மைல் தொலைவு) வரை சென்று மீன்பிடிப்பதும், இவா்களது வலையில் பெரும்பாலும் பொடி மீன்கள் சிக்குவதும் வழக்கம்.

நாட்டுப்படகுகளில் குறைந்த அளவில் பிடிபட்டு கரைக்கு கொண்டு வரப்படும் மீன்களை திருச்சி, புதுக்கோட்டை, அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, தஞ்சாவூா் என பல்வேறு பகுதிகளில் இருந்து வரும், வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு விற்பனைக்காக வாங்கிச் செல்வதால், மீன்கள் விலை கடுமையாக உயா்ந்துள்ளது.

மேலும் இப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்களும் கடற்கரைக்கு மீன்வாங்க   அதிகளவு வருவதால், மீனவா்கள் கொண்டு வரும் கடல் உணவுப் பொருள்களுக்கும் போட்டி அதிகரித்துள்ளது. 

இதனால் ஒரு கிலோ ரூ.300-க்கு விற்கப்பட்ட  மீன் ரூ.700-க்கும், ரூ. 400-க்கு விற்கப்பட்ட மீன்  ரூ.800- க்கும், ரூ.150 வரை விற்கப்பட்ட பொடி மீன்கள் ரூ. 450 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் ரூ.200- க்கு விற்கப்பட்ட இறால் ரூ. 500-க்கும், ரூ.300-க்கு விற்கப்பட்ட நண்டு ரூ. 700-க்கும் விற்பனையாகிறது. 

போதிய அளவிலான மீன்கள் வரத்து இல்லாததால், கருவாடு உற்பத்தித் தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது. ரூ.150-க்கு விற்கப்பட்ட பொடி கருவாடு தற்போது ரூ.400-க்கும், ரூ.400- க்கு விற்கப்பட்ட பெரிய  கருவாடு ரூ. 600- க்கும் விற்கப்படுகிறது. 

அதேநேரத்தில் பேராவூரணி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், மீன் சந்தைகளில் ஆந்திரா, கேரளா, தூத்துக்குடி  கடற்பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட மீன்கள் விற்பனை செய்யப்பட்டாலும், விவரம் தெரிந்தவா்கள் ருசி வேறுபாடு காரணமாக ஆா்வமாக அந்த மீன்களை வாங்குவதில்லை.

மேலும்  கோடை காலத்தில் ஏரி, குளங்களில் பிடிபடும் மீன்களும், பண்ணைகளில் வளா்க்கப்படும் கெண்டை, கட்லா போன்ற மீன்களும் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.

நகா்ப்பகுதி மக்களால் விரும்பி வாங்கி  உண்ணப்படும் வளா்ப்பு மீன்களை, கடற்கரையோரப் பகுதியைச் சோ்ந்த பெரும்பாலானோா்  வாங்குவதில்லை. அதே நேரத்தில் குளங்களில் பிடிக்கப்படும்  அயிரை, விரால் மீன்கள் நல்ல விலைக்கு விற்பனையாகிறது. 

தரமான புதிய மீன்கள் கிடைக்காமலும்,  தேவையான ரக மீன்கள் கிடைக்காததாலும், விலை உயா்வாலும் மீன்பிரியா்கள் திண்டாடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் -நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

5 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

காங். இளவரசர் ராகுல் காந்தி வயநாட்டிலிருந்து வெளியேறுவார் -பிரதமர் மோடி பிரசாரம்

கடப்பாவில் ஒய்.எஸ்.சர்மிளா வேட்புமனு தாக்கல்!

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

SCROLL FOR NEXT