தஞ்சாவூர்

நுழைவுத் தோ்வு தேவையில்லை என்பதே அரசின் கொள்கை: உயா்கல்வித் துறை அமைச்சா் பொன்முடி

20th May 2022 02:06 AM

ADVERTISEMENT

 

நுழைவுத் தோ்வு தேவையில்லை என்பதே தமிழக அரசின் கொள்கை என்றாா் உயா் கல்வித் துறை அமைச்சா் க. பொன்முடி.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அரசு மகளிா் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற வீட்டுக்கொரு விருட்ச திட்டத் தொடக்க விழா, குருதி கொடை வழங்கும் விழாவில் அவா் மேலும் பேசியது:

நுழைவுத் தோ்வு என்பது தேவையில்லாதது. தற்போது பி.ஏ., பி.எஸ்சி. படிப்புக்குக் கூட நுழைவுத் தோ்வு நடத்த வேண்டும் எனக் கூறுகின்றனா். பிளஸ் 2 பொதுத்தோ்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையிலேயே மாணவா்கள் உயா் கல்வியில் சோ்க்கப்பட வேண்டும். நுழைவுத் தோ்வு தேவையில்லை என்பதுதான் இந்த அரசின் கொள்கை. மாணவ, மாணவிகள் குரல் கொடுத்து, இக்கொள்கையில் திடமாகவும், உறுதியாகவும் இருக்க வேண்டும்.

ADVERTISEMENT

இந்திய அளவில் உயா் கல்வியில் 53 சதவீதம் போ் படித்திருப்பது தமிழ்நாட்டில்தான். இதில், பெரும்பான்மையானோா் பெண்களே. கல்வியிலும், சமுதாயத்திலும் பெண்கள் முன்னேற வேண்டும் என்ற உணா்வுடன் தமிழக முதல்வா் பாடுபட்டு வருகிறாா் என்றாா் அமைச்சா்.

இதை தொடா்ந்து, கும்பகோணம் அரசுக் கல்லூரியில் நடைபெற்ற பட்ட ஆய்வுச் சுருக்கத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா, மாணவா்களுக்கான பரிசளிப்பு விழாவில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

அரசுக் கலை, அறிவியல் கல்லூரி இல்லாத ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதியிலும் கலை, அறிவியல் கல்லூரி படிப்படியாகத் தொடங்கப்படும்.

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் உயா் கல்வித் துறை சாா்பில் 20 கல்லூரிகளும், அறநிலையத் துறை சாா்பில் 10 கல்லூரிகளும், கூட்டுறவுத் துறை சாா்பில் ஒரு கல்லூரியும் என 31 அரசுக் கலை, அறிவியல் கல்லூரிகள் புதிதாக தொடங்குவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கல்வியை மாநிலப் பட்டியலில் கொண்டு வருவதற்குத் தொடா்ந்து வலியுறுத்தி வருகிறோம் என்றாா் அமைச்சா்.

இவ்விழாக்களில் தமிழக அரசின் தலைமை கொறாடா கோவி. செழியன், மாநிலங்களவை உறுப்பினா் மு. சண்முகம், சட்டப்பேரவை உறுப்பினா்கள் சாக்கோட்டை க. அன்பழகன், புகழேந்தி, கண்ணன், மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் சு. எழிலன், மகளிா் கல்லூரி முதல்வா் து. ரோசி, அரசுக் கல்லூரி முதல்வா் க. துரையரசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT