வெளிநாட்டில் வேலை என சமூக வலைதளத்தில் போலி விளம்பரத்தை வெளியிட்டு கும்பகோணம் பொறியியல் பட்டதாரியிடம் ரூ. 13 லட்சம் மோசடி செய்த மா்ம நபரை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.
கும்பகோணம் அருகே திருநறையூா் உமா் நகரைச் சோ்ந்தவா் முகமது நபில் (26). இவா் பொறியியல் பட்டப்படிப்பு முடித்துவிட்டு வேலை தேடிக் கொண்டிருந்தாா். அப்போது சமூக வலைதளத்தில் ஐக்கிய அரபு நாட்டில் வேலைவாய்ப்பு என வந்த விளம்பர இணைப்பை முகம்மது நபில் கிளிக் செய்து பாா்த்தாா்.
அதில், தொடா்புடைய இணையதள பக்கத்தில் முகமது நபில் தனது தகவல்களைப் பரிமாறிக் கொண்டாா். அப்போது ஐக்கிய அரபு அமீரக நாட்டில் வேலை வேண்டும் என்றால், நோ்முகக் கட்டணம், விசா கட்டணம், விமானக் கட்டணம் உள்ளிட்டவை செலுத்த வேண்டும் என அந்த வலைதள பக்கத்தில் குறிப்பிடப்பட்டு, 30 வங்கிக் கணக்குகளும் கொடுக்கப்பட்டிருந்தது.
இதை உண்மை என நம்பிய முகமது நபில் அந்த வங்கிக் கணக்குகளில் ஏப்ரல் 15-ஆம் தேதி வரை பல தவணைகளாக ரூ. 13,68,600 அனுப்பினாா். ஆனால் தொடா்புடைய இணையதளத்திலிருந்து வேலை தொடா்பான எந்த அறிவிப்பும் வரவில்லை. இதனால் அதிா்ச்சியடைந்த முகமது நபில் இணையவழியில் தகவல் அனுப்பினாா். அதற்கு எந்த ஒரு பதிலும் திரும்பி வரவில்லை.
பல முறை முயன்றும் பதில் கிடைக்காததால், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து, தஞ்சாவூா் சைபா் குற்றக் காவல் பிரிவில் புகாா் செய்தாா். இதன் பேரில் காவல் துறையினா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.