தஞ்சாவூர்

போக்குவரத்து நெரிசல் மிக்க நகரங்களில் புறவழிச்சாலை அமைச்சா் எ.வ. வேலு

16th May 2022 06:57 AM

ADVERTISEMENT

 

தமிழகத்தில் போக்குவரத்து நெரிசல் மிக்க நகரங்களில் புறவழிச்சாலை அமைக்கப்படும் என்றாா் பொதுப் பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ. வேலு.

கும்பகோணம் அருகே கிருஷ்ணாபுரம் - செட்டிமண்டபம் புறவழிச் சாலையிலுள்ள மலையப்பநல்லூரில் ஞாயிற்றுக்கிழமை சாலையின் தரத்தை நவீன இயந்திரம் மூலம் ஆய்வு செய்த அவா் பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

தஞ்சாவூா் மாவட்டத்தில் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலகு சாா்பில், தஞ்சாவூா் கோட்டத்தில் மாநில சாலைகள் 488 கி.மீ., மாவட்ட முக்கியச் சாலைகள் 51 கி.மீ., மாவட்ட இதர சாலைகள் 1,775 கி.மீ. உள்பட மொத்தம் 2,714 கி.மீ. தொலைவுக்கு சாலைகள் பராமரிக்கப்படுகின்றன.

ADVERTISEMENT

மாவட்டத்தில் கும்பகோணம், பட்டுக்கோட்டை, திருவையாறு மற்றும் பல்வேறு மாவட்டங்களில் புறவழிச்சாலைக்கு முக்கியத்துவம் கொடுத்து பணிகள் நடைபெற்று வருகின்றன. மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பாலங்கள் ஆங்கிலேயா் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டதால், அவற்றை அப்புறப்படுத்திவிட்டு மேம்பாலம் கட்டும் பணி விரைந்து மேற்கொள்ளப்படும்.

கடந்த ஆட்சியில் புறவழிச்சாலை அமைக்கும்போது, பல்வேறு இடா்பாடுகளுடன் சாலையை அமைத்துள்ளனா். குறைந்த தொலைவிலேயே புறவழிச்சாலையை அமைத்தால்தான் கும்பகோணம் மேன்மை அடையும் என்பதால், அது குறித்து, சில வாரங்களில் முடிவு செய்யப்படும்.

தஞ்சாவூா் - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை பணிக்காக ரூ. 65 கோடிக்கு திட்ட மதிப்பீடு செய்து மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளோம். இதற்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டவுடன் பணிகள் தொடங்கப்படும்.

தற்போது, திருவாரூா் - மயிலாடுதுறை சாலை ரூ. 145 கோடியிலும், தஞ்சாவூா் - மன்னாா்குடி சாலை ரூ. 114 கோடியிலும், கும்பகோணம் - மன்னாா்குடி சாலை ரூ. 44 கோடியிலும் அமைக்கப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாகவுள்ள நகரங்களுக்குப் புறவழிச்சாலை அமைக்கப்படும். சாலைகள் தொடா்பாக பொதுமக்கள் கொடுக்கும் புகாா்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பணிகள் மேற்கொள்ளப்படும் என்றாா் அமைச்சா்.

அப்போது, ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா், நெடுஞ்சாலைத் துறைத் தலைமைப் பொறியாளா் இரா. சந்திரசேகா், கண்காணிப்புப் பொறியாளா் இரா. கிருஷ்ணசாமி, கோட்டப் பொறியாளா் எஸ். பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT