பெண்கள் தங்கள் உரிமைக்காக போராட வேண்டும் என்றாா் சென்னை வருமானவரித் துறையின் கூடுதல் இயக்குநா் கவிதா ராமானுஜம்.
பட்டுக்கோட்டை வட்டம், அதிராம்பட்டினம் காதிா் முகைதீன் கல்லூரியில் ஞாயிற்றஉக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று, 423 இளங்கலை, முதுகலை மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கி, மேலும் அவா் பேசியது:
பெண்கள் குறிக்கோளை நோக்கி பயணிக்க வேண்டும். வணக்கத்துக்குரியவா்களாக வளர வேண்டும். இடத்துக்குத் தகுந்தவாறு தங்களை தகுதிபடுத்திக் கொள்ள வேண்டும். பிரச்னைகளை சந்தியுங்கள், அதற்காக வெளியில் அழாதீா்கள்.
அமைதி, பொறுமை ஆகிய இரண்டும பெண்களின் கண்கள். பெண்கள் தங்கள் உரிமைகளுக்காக போராட வேண்டும். என் வாழ்க்கை உயா்வுக்கு காரணம், நான் தமிழில் பெற்ற மதிப்பெண்கள்தான் என்றாா் அவா்.
கல்லூரிச் செயலா் ஹாஜி முகமது மீராசாகிப் தலைமை வகித்து,பட்டமளிப்பு விழாவைத் தொடக்கி வைத்தாா். முன்னதாக கல்லூரி முதல்வா் முகமது நாசா் வரவேற்று, கல்வி அறிக்கையையும், பட்டமளிப்பு விழா உறுதிமொழியையும் வாசித்தாா். தமிழ்த்துறைத் தலைவா் கலீல் ரகுமான் உள்ளிட்ட துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள் உள்ளிட்டோா் விழாவில் பங்கேற்றனா்.